சென்னை:சென்னையில், 'ஏர் டாக்சி' சேவையை செயல்படுத்த, 'போயிங்' நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்ய, தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது.உலகின் பல நாடுகளில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, யு.ஏ.எம்., எனும் 'அர்பன் ஏர் மொபிலிட்டி' எனப்படும் நகர்ப்புற வான்வழி இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இது, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லாமல் இயங்கும் சிறிய விமானம், இருவர் பயணிக்கும், 'ஏர் டாக்சி' உள்ளிட்ட வாகனங்களை உள்ளடக்கியது. இதன் வாயிலாக, ஒரு நகரத்திற்குள் வான்வழியாக மக்கள் விரைந்து செல்வதுடன், சரக்குகளையும் எடுத்துச் செல்ல முடியும்.இந்நிலையில், சென்னையில், 'அர்பன் ஏர் மொபிலிட்டி' திட்டத்தை, போயிங் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்ய, 'டிட்கோ' முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, 'டிட்கோ'வின் திட்ட இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தற்போது, நம் நாட்டில் வான்வழி போக்குவரத்து, நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு மட்டும் உள்ளது; நகரத்திற்குள் இல்லை.நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, புதிய போக்குவரத்து முறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. டிட்கோ, இது குறித்து கருத்தரங்குகளை சமீபத்தில் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் யு.ஏ.எம்., திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, 'போயிங்' நிறுவனத்துடன் இணைந்து, டிட்கோ ஆய்வு மேற்கொள்ளும். அதை பொறுத்து, திட்ட மதிப்பீடு, திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.