சந்தை சரிவு காரணமாக, சில்லறை முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி., முதலீடு கணக்கை விட்டி வெளியேறும் போக்கு கற்றுத்தரும் பாடங்கள்.
சந்தை சரிவு காரணமாக, சில்லரை முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி., முதலீடு கணக்கை விட்டு வெளியேறும் போக்கு கற்றுத்தரும் பாடங்கள்.பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கமான போக்கு உண்டாக்கி இருக்கும் பலவிதமான பாதிப்புகளுக்கு மத்தியில், எஸ்.ஐ.பி., கணக்குகள் மூடப்படுவது அதிகரித்திருப்பது வல்லுனர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி., என குறிப்பிடப்படும் சீரான முதலீடு திட்டம் ஏற்றதாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் பொறுத்தமான நிதியை தேர்வு செய்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொகையை தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். குறிப்பாக சம பங்கு நிதிகளில் முதலீடு செய்து பலன் பெற இந்த முறை உதவும் என கருதப்படுகிறது. புதிய கணக்குகள்
மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் அண்மை ஆண்டு களில், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. சில்லரை முதலீட்டாளர்களில் பலர் எஸ்.ஐ.பி., முதலீட்டை நாடுகின்றனர். பங்குச்சந்தையின் ஏறுமுகமான போக்கும் இதற்கு கைகொடுத்தது. எனினும், தற்போது சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கால், சில்லறை முதலீட்டாளர்கள் பலர் எஸ்.ஐ.பி., கணக்கை விட்டு வெளியேறு வருவது தெரிய வந்துள்ளது. அண்மை மாதங்களில் ஏற்பட்ட சரிவு இந்த போக்கை அதிகரிக்கச் செய்துள்ளது.ஜனவரி மாதத்தில் முதல் முறையாக, புதிதாக துவக்கப்பட்ட எஸ்.ஐ.பி.,. கணக்குகளை விட மூடப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த காலத்தில், 5.6 மில்லியன் கணக்குகள் துவக்கப்பட்ட நிலையில் 6.1 மில்லியன் கணக்குகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆறாவது மாதமாக நிகர கணக்குகளின் இறங்குமுகம் நீடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும், எஸ்.ஐ.பி., மொத்த முதலீடு ஜனவரி மாதத்தில் 26,400 கோடியாக இருந்துள்ளது. சந்தையில் ஏற்படும் திருத்தம் தொடர்ந்தால், எஸ்.ஐ.பி., முதலீட்டில் மேலும் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. தொடர் முதலீடு
எஸ்.ஐ.பி., முதலீட்டை பொறுத்தவரை சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முதலீடு செய்வதே ஏற்றதாக கருதப்படுகிறது. நீண்ட கால நோக்கில் இது நல்ல பலனை அளிக்கும் என வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். சந்தை சரியும் காலத்தில் அதிக யூனிட்கள் வாங்கி பலன் பெற முடியும் என்பது போன்ற அம்சங்களும் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகின்றன. சந்தை சரியும் போது, அச்சம் உண்டாவது இயல்பு என்றாலும், இத்தகைய சரிவை எதிர்கொள்ளும் அனுபவத்திலேயே பலரும் எஸ்.ஐ.பி., கணக்கை விட்டு வெளியேறுவது கவலை அளிக்கும் அம்சம் என்கின்றனர். லாபம் வரும் போது முதலீட்டை தொடரும் முதலீட்டாளர்கள், நஷ்டம் வரும் போது மோசமாக உணர்ந்து வெளியேறுவதாக கருதப்படுகிறது.அதே நேரத்தில் எஸ்.ஐ.பி., கணக்குகள் மூடப்படுவது பெரிய அளவில் கவலை அளிக்கவில்லை என்றும் மியூச்சுவல் பண்ட் துறையில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். எஸ்.ஐ.பி., கணக்குகள் குறிப்பிட்ட காலத்திற்கு துவங்கப்பட்டு, அதன் பிறகு விலக்கி கொள்ளப்பட்டிருக்கலாம் என்கின்றனர். இடைக்கால சிக்கல்களை மீறி முதலீட்டை சீராக தொடர்வதற்கான வழியாக எஸ்.ஐ.பி., அமைவதை உணர வேண்டும் என்கின்றனர். சந்தையின் போக்கு, இடர் அம்சங்கள் மற்றும் இலக்குகளை மனதில் கொண்டு முதலீட்டை தொடர்வதன் அவசியம் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கருதுகின்றனர்.