| ADDED : செப் 14, 2011 06:24 AM
புதுடில்லி:'நான் கூறிய கருத்துக்களுக்காக எம்.பி.,க்கள் பதட்டமடையக் கூடாது. மக்களின் கருத்துக்களைத் தான் பிரதிபலித்தேன்' என, அன்னா ஹசாரே குழுவில் உள்ள பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.ஊழலுக்கு எதிராக டில்லியில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரது குழுவில் இடம் பெற்றிருந்த கிரண் பேடி, அர்விந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோர் எம்.பி.,க்களை விமர்சித்துப் பேசினர். இதற்காக அவர்கள் மீது பார்லிமென்டில் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு விளக்கம் அளித்து பிரசாந்த் பூஷன், ராஜ்ய சபா செயலக இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடுகையில், 'எம்.பி.,க்களை நான் விமர்சித்துப் பேசியது தொடர்பான ஆவணங்களை, ஒலிநாடாக்களை, சி.டி.,க்களை எனக்கு அனுப்பி வையுங்கள். பார்லிமென்டை பற்றியும், எம்.பி.,க்களை பற்றியும் மக்கள் கொண்டுள்ள கருத்தைத் தான் என் பேச்சு எதிரொலித்துள்ளது. இதற்காக, எம்.பி.,க்கள் பதட்டம் அடையக் கூடாது' என தெரிவித்துள்ளார்.