மேலும் செய்திகள்
ஆர்எஸ்எஸ் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல; மோகன் பகவத் பேச்சு
2 hour(s) ago | 2
தெலுங்கானா விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆந்திர கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோரை டில்லிக்கு அழைத்து, பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார். அதே நேரத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை அழைத்து, பிரணாப் முகர்ஜி பேசினார். இதனால், தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி நடக்கும் போராட்டம், தொடர்ந்து 27வது நாளாக நேற்று தொடர்ந்ததால், மத்திய அரசும், காங்கிரசும் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் அழைப்பின் பேரில் ஆந்திர கவர்னர் நரசிம்மனும், முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் நேற்று டில்லி வந்தனர். இவர்கள் இருவரையும் பிரதமர் தனித்தனியே அழைத்து ஆலோசனை நடத்தினார்.கவர்னர் நரசிம்மனுடன் நடத்திய பேச்சின் போது, ஆந்திராவின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது. ஆந்திராவில் மாநில அரசே இல்லை எனும் அளவுக்கு முற்றிலும் நிர்வாகம் முடங்கிப் போய் இருக்கிறது; எந்தப் பணிகளும் நடக்கவில்லை என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது. அதேபோல, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் கவர்னர் நரசிம்மன் சந்தித்து இந்தப் பிரச்னை குறித்து பேசினார்.கிரண்குமார் ரெட்டியுடன் நடத்திய ஆலோசனையில், தெலுங்கானா போராட்டத்தின் கள நிலவரம் பற்றி முழுமையாக பிரதமர் கேட்டறிந்தார். மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை எந்த அளவுக்கு உள்ளது என்பது பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஆந்திர கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோரை பிரதமர் அழைத்து ஒருபுறம் முக்கிய ஆலோசனைகளை நேற்று நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான மூத்த அமைச்சர்கள் குழுவும், தெலுங்கானா விவகாரத்தில் தீவிரமாக இருந்தது.இந்த குழுவில், உள்துறை அமைச்சர் சிதம்பரம், ராணுவ அமைச்சர் அந்தோணி, சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், குழுவின் ஆலோசனைகள் நடைபெற்றன.இந்த ஆலோசனையின் போது, மாநில அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர். தவிர, ஆந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து கருத்து கேட்டனர். அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி, பனபகா லட்சுமி, புரந்தரேஸ்வரி, பல்லம் ராஜு ஆகியோர் தனித்தனியே இந்த குழுவை சந்தித்தனர்.ஆந்திராவைப் பிரித்து தனியாக தெலுங்கானா மாநிலம் அமைப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு என்ன லாபம், அரசாங்கத்திற்கு ஏற்படும் விளைவுகள், பொருளாதார அரசியல் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதக, பாதகங்கள் குறித்து ஒவ்வொருவரிடமும் இந்தக் குழு கேட்டறிந்தது.
அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறும்போது, 'தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தான் ஒரே வழி. ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் தரவில்லை எனில், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவே கிடைக்காது' என, கூறியுள்ளார். அமைச்சர் பல்லம் ராஜு கூறும்போது, 'நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. ஆந்திரா கற்காலத்தை நோக்கி சென்று விட்டது. நூறாண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு ஆந்திரா சென்றுவிட்டது. எந்த முடிவு வேண்டுமானாலும் எடுங்கள்; அதை சீக்கிரம் எடுங்கள்' என, கூறியுள்ளார்.அமைச்சர் பனபகா லட்சுமியோ, 'ஆந்திராவைப் பிரிக்கக்கூடாது. அவ்வாறு பிரித்தால், ஆந்திராவில் ஜெகன் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் ஒதுக்கப்படும் நிலைமை ஏற்படும். பிரிவினை என்பது காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பாக முடியும். எனவே, ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது. தெலுங்கானா போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறும்போது, 'காங்கிரஸ் மேலிடம் பார்த்து என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுக்கட்டும். அரசியல் ரீதியான நல்லதொரு முடிவாக அது இருக்க வேண்டும்' என கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு, இதே கருத்துக் கேட்பு நிகழ்ச்சியை இன்றும் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது. இன்றைய ஆலோசனைக்கு ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு தலைவரான கே.எஸ்.ராவ் அழைக்கப்பட்டுள்ளார்.காங்கிரசுக்கு சாதகமான, பாதகமான அம்சங்களை அலசி ஆராயும் இந்த ஆலோசனைகளை ஓரிரு நாட்களில் முடித்துக் கொண்டு, அடுத்ததாக காங்கிரஸ் உயர்மட்டக் குழு அல்லது காரியக் கமிட்டி கூடி, தெலுங்கானா குறித்து இறுதியான முடிவை எடுக்க உள்ளது. தெலுங்கானா வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்.அதன் பிறகு மாநில அளவிலும், தேசிய அளவிலும் அனைத்துக் கட்சி கூட்டப்படும். அதில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். எப்படியும் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன், தெலுங்கானா குறித்து ஒரு தெளிவான முடிவு வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலவரையற்ற உண்ணாவிரதம்: எம்.பி.,க்கள் எச்சரிக்கை:ஐதராபாத்: 'தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தற்போது நடந்து வரும் போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தயாராக உள்ளோம்' என, தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.,க்கள் எச்சரித்துள்ளனர்.
ஆந்திராவில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., மது யாசின் கவுட் கூறியதாவது:தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், டில்லியிலிருந்து இன்னும் சாதகமான பதில் வரவில்லை. இதே நிலை நீடித்தால், போராட்டம் மேலும் தீவிரமடையும். தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், நாங்களும் (காங்., எம்.பி.,க்கள்) போராட்டத்தில் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. தேவைப்பட்டால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தயாராக உள்ளோம்.இவ்வாறு மது யாசின் கவுட் கூறினார்.
மற்றொரு காங்., எம்.பி., ஜகன்னாதம் கூறுகையில், ''தனி மாநிலம் அமைவதற்காக எந்த ஒரு போராட்டத்துக்கும் தயாராக உள்ளோம். விரைவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்குவோம்,'' என்றார்.காங்கிரஸ் எம்.பி., பொன்னம் பிரபாகர் கூறுகையில், ''ஆந்திர கவர்னர், முதல்வர், துணை முதல்வர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆகியோர் டில்லியில் முகாமிட்டுள்ளனர். தனி மாநிலம் அமைய வேண்டியதன் அவசியத்தை, இவர்கள் வலியுறுத்துவர் என எதிர்பார்க்கிறோம். தெலுங்கானா விவகாரத்துக்காக, அனைத்து தரப்பினரும் டில்லியில் முகாமிட்டுள்ளது, ஒரு சரித்திரப்பூர்வமான நிகழ்வு,'' என்றார்.
-நமது டில்லி நிருபர்-
2 hour(s) ago | 2