| ADDED : ஜூலை 06, 2024 12:59 AM
பாட்னா,பீஹாரில் கடந்த 17 நாட்களில் 12 பாலங்கள் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, நீர்வளத்துறையை சேர்ந்த 14 இன்ஜினியர்களை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த சில நாட்களாக புதிய மற்றும் பழைய பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழும் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த 17 நாட்களில் மட்டும் சிவான், சரண், மதுபானி, அராரி, கிழக்கு சம்பரான், கிஷான்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. நேற்று முன்தினம் சரண் மாவட்டத்தில் உள்ள கண்டகி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 15 ஆண்டு பழமையான பாலம் இடிந்து விழுந்தது. இந்நிலையில், பாலங்கள் இடிந்த சம்பவம் தொடர்பாக நீர்வளத்துறை இன்ஜினியர்கள் 14 பேரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பீஹார் மாநில மேம்பாட்டுத்துறை செயலர் சைதன்யா பிரசாத் கூறுகையில், “பாலங்கள் இடிந்த சம்பவத்தை மாநில அரசு தீவிரமாக கையாள்கிறது. சம்பந்தப்பட்ட பாலங்களை கட்டிய ஒப்பந்ததாரர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.