நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, 50 ரூபாய் சுதர்சன டிக்கெட் எண்ணிக்கையை, 50 சதவீதம் குறைக்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
திருமலை கோவிலில், இம்மாதம் 29ம் தேதி துவங்கும் பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது, திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக, தினமும் 50 ரூபாய் மதிப்புள்ள சுதர்சன தரிசன டிக்கெட்கள், 12 ஆயிரத்து 500 வரை வழங்கப்படுகின்றன. இதில், வெளியூர்களில் உள்ள இ-தரிசன மையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்கள் மூலம், 7,500 டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் அதிகாலை 5 மணி முதல் திருப்பதியில், ரயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்ரீநிவாசம், அலிபிரி டோல்கேட் போன்ற இடங்களிலும், 5,000 டிக்கெட்கள் வரை வழங்கப்படுகின்றன. ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, 50 ரூபாய் சுதர்சன டிக்கெட் வழங்குவதை, 12,500லிருந்து 6,250 ஆக குறைக்கவும், அடுத்த மாதம் 3ம் தேதி, கருடசேவையன்று ஒரு நாள் மட்டும், இந்த டிக்கெட் வழங்குவதை முழுமையாக நிறுத்தி விடவும் முடிவு செய்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.