உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அவசர வழியில் சிதறி ஓடிய பயணியர்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அவசர வழியில் சிதறி ஓடிய பயணியர்

புதுடில்லி, டில்லி விமான நிலையத்திலிருந்து வாரணாசி செல்ல இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அதில் இருந்த 176 பயணியரும் அவசரகால வழியாக வெளியேறினர். டில்லி விமான நிலையத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு, 176 பயணியருடன் இண்டிகோ விமானம் நேற்று காலை 5:35 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.

பதற்றம்

அப்போது, விமான கழிப்பறையில் உள்ள கை துடைக்க பயன்படும் டிஸ்யூ பேப்பரில், '5:30 மணிக்கு வெடிகுண்டு' என எழுதப்பட்டிருந்த வாசகத்தை கண்டு விமான பணியாளர்கள் பதற்றம் அடைந்தனர். இச்சம்பவத்தின் போது விமான இறக்கையின் மீதும், பின்பக்கமாக உள்ள தாழ்வுதளத்தில் உள்ள அவசரகால வழியாகவும் பயணியர் விடப்பட்டனர். உயிர் பயத்தில் சில பயணியர், அதில் சறுக்கியபடியே வேகமாக குதித்து ஓடினர். மேலும் சிலர், விமானத்தின் இறக்கையில் நடந்து வந்து கீழே குதித்தனர். இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சோதனை

இதுகுறித்து டில்லி சர்வதேச விமான நிலையம் போலீஸ் துணை கமிஷனர் உஷா ரங்னானி கூறுகையில், “வாரணாசிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. ''இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களின் உதவியுடன் விமானத்தில் சோதனை நடத்தியதில், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் எந்த பொருட்களையும் கண்டறியவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி,” என்றார்.இது குறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இச்சம்பவத்தில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. குறிப்பாக, பயணியரின் பாதுகாப்பை கருதி அவர்கள் அனைவரையும் வெளியேற்றினோம். ''சிலர், பயத்தில் இறக்கையில் ஏறினர். ஆனாலும், பாதிக்கப்பட்ட பயணியர் அனைவரும், காலை 11:00 மணிக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வாரணாசிக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ