உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மினி வனமாக மாறிய தபால் அலுவலகம்

மினி வனமாக மாறிய தபால் அலுவலகம்

இன்றைய காலத்தில், வனப்பகுதிகள் கான்கிரீட் காடுகளாக மாறுகின்றன. பசுமை மாயமாகிவிட்டது. வானுயர்ந்த கட்டடங்களை கட்டுவதில் ஆர்வம் காண்பிக்கும் மக்கள், வனங்களை பராமரித்து பசுமையாக வைத்திருந்து, அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வதில், அக்கறை காண்பிப்பது இல்லை. வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.இயற்கையை நாம் காப்பாற்றினால் தான், இயற்கை நம்மை காப்பாற்றும் என்ற நியதியை, மக்கள் மறந்துள்ளனர். வளர்ச்சி பணிகளை காரணம் காண்பித்து, மரங்களை வெட்டி போடுகின்றனர். சிலருக்கு மட்டுமே இயற்கையின் மகத்துவம் புரிகிறது. நர்குந்த் தபால் அலுவலக ஊழியர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

மக்கள் வியப்பு

கதக், நர்குந்தின் தபால் அலுவலகத்துக்கு வரும் மக்கள், வியப்படையாமல் இருக்கவே முடியாது. இந்த தபால் அலுவலகம், அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. இங்கு சென்றால் மனதுக்கு, இனிமையான அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அடர்த்தியான வனப்பகுதிக்கு நடுவில், இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இதை உருவாக்கியவர்கள் ஊழியர்கள் தான்.நர்குந்த் தபால் அலுவலகத்தில், 2017ல் மரிதிம்மப்பா ஊழியராக பணியில் சேர்ந்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட அவர், வனம் உருவாக்க, கதக் மாவட்ட நிர்வாகத்திடம், மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். அனுமதி கிடைத்த பின், தன் சொந்த செலவில், பலவிதமான செடிகளை நட துவங்கினார். அந்த செடிகள் மரமாக வளர்ந்து நின்றுள்ளன. தற்போது தபால் அலுவலக சுற்றுப்பகுதி, மினி வனமாக மாறியுள்ளது.சமூக ஆர்வலர்கள், தபால் அலுவலக சக ஊழியர்கள் இவருக்கு உதவினர். சக ஊழியர்களின் உதவி பெற்று குளம் அமைத்தார். அதன்பின் மரிதிம்மப்பா இடமாற்றம் செய்யப்பட்டார். இவரது இடத்துக்கு கரிகாரா நியமிக்கப்பட்டார். கதக்கின், ஆசுன்டி கிராமத்தை சேர்ந்த இவருக்கு செடிகள், தாவரங்களை பற்றி நன்றாக தெரிந்திருந்தது. அபூர்வமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்தார்.

கூட்டம், கூட்டமாக

மரி திம்மப்பா, கரிகாராவின் முயற்சியால், நர்குந்த் தபால் அலுவலகம் சுற்றுலா தலமாக மாறியுள்ளது. மினி வனத்தை பார்க்க மக்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். சுற்றுப்புற மக்கள் காலை, மாலை இந்த வனத்தில் நடை பயிற்சி செய்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் இந்த வனத்தை பார்க்க வருகின்றனர்.அலுவலகத்துக்கு வந்து பெயரளவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடுவில், மரி திம்மப்பா, கரிகாராவின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது.கரிகாரா கூறியதாவது:கடந்த 2017ல், நான் நர்குந்த்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். வனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தேன். சக ஊழியர்கள், கிராமத்தினர் உதவியுடன் மினி வனத்தில் குளங்கள் அமைத்தோம். இப்போது, நான் கொப்பால் தபால் அலுவகத்தில் பணியாற்றுகிறேன்.ஆனால் பலரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வனம் உருவாக்கியதற்காக பாராட்டுகின்றனர்; மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மக்களுக்கு சுற்றுச்சூழலில் ஆர்வம் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிடித்தமான இடம்

பள்ளி ஆசிரியர் மகேஷ் ஹங்கனகட்டி கூறியதாவது:நான் பலமுறை, நர்குந்த் தபால் அலுவலகத்துக்கு சென்றுள்ளேன். அங்கு மினி வனம் உள்ளது. மாணவர்களுக்கு பிடித்தமான இடம். அவ்வப்போது அங்கு செல்ல விரும்புகின்றனர். நர்குந்த் மக்களுக்கு, தபால் அலுவலகம் பிடித்தமான சுற்றுலா தலமாக மாறியுள்ளது.ஒரு மனிதன் நினைத்தால். சூழ்நிலையை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதற்கு, இந்த தபால் அலுவலகம் உதாரணமாக அமைந்துள்ளது. இந்த அலுவலகம், மற்ற தபால் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களுகு, முன் மாதிரியாக திகழ்கிறது.இன்றைய சூழ்நிலையில், சுத்தமான காற்று கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. எனவே வனத்தை பாதுகாப்பது அவசியம். மரங்கள் நடுவதால் எந்த பயனும் இல்லை என, நினைப்பது தவறாகும். நம் அடுத்த சந்ததியினருக்கு அதிகமான மரங்களை நடுவது, மிகவும் முக்கியம். நர்குந்த் தபால் அலுவலக ஊழியர்களை நான் பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி