| ADDED : மே 09, 2024 06:38 AM
சாம்ராஜ் நகர்: விவசாய விளைச்சல் நிலங்களை சேதப்படுத்தி வந்த 40 வயது ஆண் யானை, கும்கி யானைகளை கொண்டு நேற்று பிடிக்கப்பட்டது.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் பண்டிப்பூர் புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட ஹிரெகெரேயின் ஹங்காலா கிராமத்தில், மூன்று நான்கு மாதங்களாக விவசாய விளைச்சல் நிலங்களை ஒற்றை யானை நாசம் செய்து வந்தது.இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் குண்டுலுபேட் வந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்டரேயிடம் கிராமத்தினர் முறையிட்டனர்.அமைச்சரின் உத்தரவின்பேரில், கடந்த ஏப்ரலில் யானையை பிடிக்க ராம்பூர் யானைகள் முகாம், துபாரே யானைகள் முகாமில் இருந்து தலா இரு யானைகள் என, நான்கு யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. இவற்றுடன் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 25 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒருவழியாக நேற்று காலை பண்டிப்பூர் புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட கோபாலகிருஷ்ணா மலை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 40 வயது யானையை, 'கும்கி' யானைகள் உதவியுடன் பிடித்தனர். பண்டிப்பூர் வனத்துறை அதிகாரி பிரபாகரன் கூறுகையில், ''விவசாயிகளின் நிலத்தை நாசம் செய்து வந்த 40 வயது ஆண் யானை பிடிபட்டது. இந்த யானையை, வனப்பகுதிக்குள் விடுவது தொடர்பாக, உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.