உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நோய்வாய்ப்பட்ட தந்தையை தவிக்கவிட்டு வாடகை வீட்டை காலி செய்த மகன்

நோய்வாய்ப்பட்ட தந்தையை தவிக்கவிட்டு வாடகை வீட்டை காலி செய்த மகன்

கொச்சி, நோய் வாய்ப்பட்ட தந்தையை பட்டினியால் இரண்டு நாட்கள் தவிக்கவிட்ட மகன், வாடகை வீட்டை காலி செய்து குடும்பத்தினருடன் தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திரிபுனித்துரா பகுதியை சேர்ந்தவர் அஜித். இவருக்கு திருமண மான இரு சகோதரிகள் உள்ளனர்.

அதிர்ச்சி

அஜித், மனைவி, இரு குழந்தைகள் மற்றும் தந்தை சண்முகன், 70, உடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த நான்கு மாதங்களாக வாடகை செலுத்தாத நிலையில் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் சுனில் கூறியுள்ளார்.இந்த நிலையில் நோய் வாய்ப்பட்ட தந்தையை வீட்டில் தனியாக விட்டு, வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் வீட்டை அஜித் காலி செய்துள்ளார். நேற்று அந்த வீட்டுக்குள் சென்று பார்த்த உரிமையாளர் சுனில், நோய்வாய்ப்பட்ட சண்முகன், இரண்டு நாட்களாக பட்டினியாலும், மருந்தின்றியும் தவிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சண்முகனுக்கு உணவு வழங்கிய சுனில், தப்பியோடிய அஜித் குறித்து போலீசில் புகார் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து சண்முகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி அறிந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், முதியவர் சண்முகனுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரித்த எஸ்.ஐ., ரேஷ்மா கூறியதாவது:சண்முகனை பார்க்க அஜித் தன் சகோதரிகள் இருவரையும் அனுமதிப்பதில்லை. தந்தையின் மருத்துவ செலவு தொடர்பாக மூவர் இடையே இருந்த பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை

முதியவரை தவிக்கவிட்டது தொடர்பாக மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து அஜித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி 10 நாளில் அறிக்கை தாக்கல் செய்யவும் கமிஷன் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து போலீசாரும் முதியோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அஜித்தை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு பின் சண்முகன் அருகேயுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை