பெங்களூரு: லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும்; டீசல் விலை 3.50 ரூபாயும் உயர்த்தி, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு லிட்டருக்கு, 2 ரூபாய் குறைத்தது.இதையடுத்து, பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.83 ரூபாய்க்கும்; டீசல் விலை 85.93 ரூபாய்க்கும்; பவர் பெட்ரோல் விலை 106.66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. காரணம்
விலை உயர்த்தும் எண்ணம், மாநில அரசுக்கு இருந்தும், லோக்சபா தேர்தல் வந்ததால், விலை உயர்த்தப்படவில்லை. தேர்தலும் முடிந்துவிட்டது.வளர்ச்சிப் பணிகளுக்கு அரசிடம் போதிய பணம் இல்லை என்று கூறப்படுகிறது. காங்., ஆட்சி அமைந்து, ஓராண்டு ஆகியும் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.நிதி சுமையை சமாளிக்கும் வகையில், வணிக வரி, கலால் வரி, சுரங்கம், பத்திரப்பதிவு, போக்குவரத்து, நிதி ஆகிய துறை உயர் அதிகாரிகளுடன், பெங்களூரில் இம்மாதம் 11ம் தேதி, முதல்வர் சித்தராமையா முக்கிய ஆலோசனை நடத்தினார்.வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று விவாதித்தனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், எரிபொருள் விலை உயர்த்தினால், வருவாய் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் நிதி சுமையை சமாளிக்க முடியும் என்றும் முடிவு செய்யப்பட்டது. திடீர் உத்தரவு
இதன்படி, திடீரென பெட்ரோல் மீதான மாநில வரியை 25.92 சதவீதத்தில் இருந்து, 29.84 சதவீதமாகவும்; டீசல் மீதான மாநில வரியை, 14.34 சதவீதத்தில் இருந்து, 18.44 சதவீதமாகவும் நேற்று உயர்த்தி, மாநில அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும்; டீசல் விலை 3.50 ரூபாயும் உயர்ந்துள்ளது. புதிய விலை உடனுக்குடன் அமலுக்கு வந்தது.இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்த நிலையில், காங்கிரஸ் அரசு, தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது என்று மக்கள் வேதனைப்படுகின்றனர்.விரைவில் கலால் வரி, பத்திரப்பதிவு கட்டணம், காவிரி குடிநீர் விலையும் உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.