| ADDED : மார் 25, 2024 05:17 PM
பாட்னா: வரும் லோக்சபா தேர்தலில் பீஹாரில் உள்ள 40 தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் ஐந்தாவது பட்டியல் வெளியானது. மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், பீஹாரின் உஜியார்பூர் தொகுதியிலும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பேகுசராய் தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாட்னா சாஹிப் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.இது குறித்து கிரிராஜ் சிங் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக ஏழைகள் மற்றும் விவசாயிகள் பிரதமர் மோடி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் பீஹாரில் உள்ள 40 தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும். பேகுசராய் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். நாட்டு மக்கள் காங்கிரசை நிராகரித்து விட்டனர். மக்கள் பா.ஜ.,வை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற செய்வார்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தலையும் மிக தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். சவாலுடன் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.