| ADDED : ஜூலை 20, 2024 06:27 AM
மைசூரு: மின்சாரம் தாக்கி இறந்த, பசு மாட்டின் சமாதி முன்பு, கன்று குட்டி பாச போராட்டம் நடத்திய வீடியோ காண்போர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.'அம்மான்னா சும்மா இல்லடா... அவ இல்லைன்னா யாரு இல்லடா' என்ற பாடல் வரிகள், தாய் மீது பிள்ளைகள் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.இந்த உலகில் இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அம்மா என்றால் அவ்வளவு பிடிக்கும். இந்நிலையில் தாயை இழந்த கன்றுக்குட்டி பாச போராட்டம் நடத்திய கண்கலங்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.மைசூரின் எஸ்.ஆர்.எஸ்., லே- அவுட் பகுதியில் வசிப்பவர் விவசாயி ராமப்பா. இவர் பசுமாட்டையும், கன்றுக்குட்டியையும் வளர்த்து வந்தார்.இந்நிலையில் கடந்த 16ம் தேதி மின்சாரம் தாக்கி பசுமாடு இறந்தது. பசுவை குழி தோண்டி ராமப்பா புதைத்தார். இதை கன்றுக்குட்டி பார்த்துக்கொண்டே இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் பசுமாடு புதைக்கப்பட்ட சமாதிக்கு சென்ற கன்று குட்டி, சமாதியை சுற்றி சுற்றி வந்தது. சமாதி மண்ணை காலால்தோண்டியது. மா, மா என்று கத்தியது. இதை அப்பகுதி மக்கள் சிலர் பார்த்து கண்ணீர் வடித்தனர். மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவை பார்ப்பவர்கள் கண் கலங்குகின்றனர்.