பெங்களூரு: ''யானைகள் - மனிதர்கள் மோதல் தவிர்க்க முடியாத சவாலாக உள்ளது. மோதலைத் தடுக்க அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார்.உலக யானைகள் தினத்தை ஒட்டி, கர்நாடக வனத்துறை சார்பில், பெங்களூரு எலஹங்காவில் உள்ள ஜி.கே.வி.கே., அரங்கில், நேற்று யானைகள் - மனிதர்கள் மோதல் தடுப்பது குறித்து சர்வதேச மாநாடு நடந்தது. மாநாட்டை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்து, பேசியதாவது:யானைகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாப்பதன் மூலம், யானைகள் - மனிதர்கள் மோதலை குறைக்க முடியும். இந்த பிரச்னைக்கு அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். காரணம் என்ன?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகளுடன் இணைந்து மக்கள் வாழ்கின்றனர். ஆனால், வனம் அழிப்பு, கால நிலை மாற்றத்தால், யானைகள் - மனிதர்கள் மோதல் அதிகரிக்கிறது. ஒரு காலத்தில் யானைகள் உணவு சாப்பிட்ட இடம், இன்று மனிதர்கள் வாழ்விடமாக மாறியதும்; நீர் நிலைகளைத் தேடி யானைகள் அலைவதும் மோதலுக்கு ஒரு காரணமாக உள்ளது.மேலும், நெடுஞ்சாலைகள் அமைப்பது, தொழில் வளர்ச்சி, நகர வளர்ச்சியால், யானைகள் வனத்தில் இருந்து, மக்கள் வாழ்விடங்களுக்கு வருகின்றன. 2017 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், 30,000 யானைகள் உள்ளன. இதில், அதிகபட்சமாக கர்நாடகாவில் 6,395 யானைகள் உள்ளன. இது நாட்டின் ஒட்டு மொத்த யானைகளின் எண்ணிக்கையில், 25 சதவீதம்.கடந்த 2022 புலிகள் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் 563 புலிகள் உள்ளன. இதன் மூலம் புலிகள் எண்ணிக்கையில், நாட்டிலேயே கர்நாடகா 2ம் இடத்தில் உள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான பெரிய பாலுாட்டிகள், தாவரங்கள், வன விலங்குகள் கர்நாடகாவில் உள்ளன. இதற்கு கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் முக்கிய காரணம்.மைசூரு, தாண்டேலி ஆகிய இரண்டு பெரிய யானைகள் காப்பகங்கள் கர்நாடகாவில் உள்ளன. 10,000 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த காப்பகங்கள், யானைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் வாழ்விடங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2,500 சம்பவங்கள்
ஆனாலும், யானைகள் - மனிதர்கள் மோதல் தவிர்க்க முடியாத சவாலாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், மாநிலத்தில், 2,500 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 350 பேர் இறந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தான், இந்த சர்வதேச மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த மோதலைத் தடுப்பதற்காகவே, ஆண்டுதோறும் கர்நாடக பட்ஜெட்டில், 150 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மோதலைத் தடுக்க தொழில்நுட்பம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த வகையில், யானைகள், மனிதர்கள் பாதுகாக்க மாநாட்டில் நடக்கும் கருத்தரங்கு மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் சிவகுமார், வனத்துறை அமைச்சர்கள் கர்நாடகா - ஈஸ்வர் கன்ட்ரே, தமிழகம் - மதிவேந்தன், கேரளா - சுசீந்திரன், தெலுங்கானா - கொண்ட சுரேகா, ஜார்க்கண்ட் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பைத்யநாத் ராம் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.