சென்னை - மைசூரு புல்லட் ரயில் இறுதி கட்டத்தில் ஆய்வு பணிகள்
பெங்களூரு:மத்திய அரசின் லட்சிய திட்டமான சென்னை -- மைசூரு புல்லட் ரயில், கோலார் மாவட்டம் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.சென்னை -- மைசூரு இடையே தென்மாநிலங்களின் முதல் புல்லட் ரயில் இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகம், கர்நாடகா, மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களை இணைக்கும் திட்டமாக இது உள்ளது. இதற்கான முதல் கட்ட ஆய்வு பணிகள், தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன.இது 463 கி.மீ.,யில் அமைய உள்ளது. கோலார் மாவட்டத்தில் மட்டும் 70 கி.மீ., துாரத்தை கடந்து செல்லும். சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏற்கனவே அதிகாரிகளிடம் இருந்து கேட்கப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக, சென்னையில் இருந்து பெங்களூரு வரை பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்டமாக, பெங்களூரு முதல் மைசூரு வரை விரிவுபடுத்தப்படும். இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இவ்வழித்தடத்தில், மொத்தம் 11 ரயில் நிலையங்கள் இருக்கும்.கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகாவில், ஹுதுக்குளா அருகே, ஒரு ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை - மைசூரு இடையே செல்லும் இந்த ரயில் பாதைக்காக நிலத்தை இழக்கும் மக்களுக்கு தற்போதைய விலையை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான விலையை மத்திய அரசு வழங்கும்.தற்போது நடந்து வரும் பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் வழித்தடத்திற்கு அருகிலேயே புல்லட் ரயில் பாதை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. உயரமான மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் வழியாக, புல்லட் ரயில் இயக்க திட்டமிடுவதால் விவசாயிகளுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது.
1 மணி நேரம் தான்!
கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபு கூறியதாவது:புல்லட் ரயில் திட்டம், கோலார் மாவட்டத்திற்கு பல வசதிகளை வழங்கும். மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மக்கள் பயனடைவர். பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். தென் மாநிலங்களில் முதல் திட்டம் என்பதால், மாநில அரசும் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏற்கனவே ஆய்வுப் பணிகள் முடிந்து விட்டதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு செல்லும். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.