உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., தலைவர் பதவிக்கு ரமேஷ் குமார் துண்டு ; கட்டை போடும் உட்கட்சி எதிரி முனியப்பா

காங்., தலைவர் பதவிக்கு ரமேஷ் குமார் துண்டு ; கட்டை போடும் உட்கட்சி எதிரி முனியப்பா

கர்நாடக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், கர்நாடக மேலவை உறுப்பினர் பதவிக்கு முயற்சித்தார். ஆனால் எட்டாக்கனியாகி விட்டது. எல்லா சட்ட நுணுக்கமும், அரசுக்கு ஆலோசனை வழங்கும் திறனும், அனைவரையும் அடக்கி ஆளும் ஆற்றலும், எதிர்க்கட்சியினரை சமாளிக்கும் தகுதியும் படைத்தவர் ரமேஷ்குமார் என்பதில் சந்தேகமில்லை.

அரசியலில் தொய்வு

கோலார் மாவட்டம், சீனிவாசப்பூரில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ., ஆனவர். அமைச்சர், சபாநாயகர் பதவிகளை வகித்தவர். 2023 சட்டசபை தேர்தலில் தோற்ற பின், அவரது அரசியல் செயல்பாடுகள் தொய்வு அடைந்து உள்ளது.தனக்கு கர்நாடக மேலவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். இதற்காக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரை சந்தித்தும் பயனில்லாமல் போனது. கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் உட்பட மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் சிபாரிசும் எடுபடாமல் போனது. டில்லியில் உள்ள சிலர் முட்டுக்கட்டையாக இருந்தனர்.

பம்மாத்து

பதவி கிடைக்காததால் சீ...சீ... இந்த பழம் புளிக்கிறது என்பது போல, எம்.எல்.சி., பதவியை தான் எதிர்பார்க்காதது போல, 'பம்மாத்து' செய்கிறார். கட்சி தலைமை ஒப்பந்தபடி, முதல்வர் சித்தராமையாவின் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகள் தான். இதில் ஓராண்டு கழிந்து விட்டது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவிக்கு, துணை முதல்வராக உள்ள சிவகுமார் தர்பார் நடத்துகிறார்.இதனால், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, சிவகுமார் வெளியேறும் பட்சத்தில், அப்பதவியில் கர்நாடகாவின் வட மாவட்டத்தை சேர்ந்தவருக்கு தான் வழங்க வேண்டும் என்பது பலரின் வலியுறுத்தலாக இருந்தாலும், அந்த நாற்காலியில் அமர, ரமேஷ்குமார் முயன்று வருகிறார்.

நேரடி எதிரி

ஆனால், அவரது நேரடி எதிரியாக கருதப்படும், உணவுத்துறை அமைச்சர் முனியப்பா என்ன செய்வார் என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை முனியப்பாவே, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கேட்டு, ரமேஷ்குமாருக்கு நெருக்கடியை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.சீனிவாசப்பூர் தொகுதியில் தன்னை தோற்கடித்ததால், முனியப்பா மீதான கோபம் ரமேஷ்குமாருக்கு இன்னமும் தணியவில்லை. இதன் தொடர் 'லடாய்' தான், கோலார் லோக்சபா தொகுதியில், முனியப்பா மருமகனுக்கு சீட் கிடைக்க விடாமல் செய்தது என்பதை அனைவரும் அறிவர். பழிக்கு பழி வாங்குவதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.அமைச்சர் முனியப்பாவும், ரமேஷ்குமாரும் 70 வயதை கடந்தவர்கள். இவர்களின் உட்கட்சி அரசியல் போட்டி ஆட்டத்துக்கு எல்லையே இல்லை. ரமேஷ்குமாரை அரசியலில் தலை துாக்க விடாமல் செய்வதில், முனியப்பா ஓவர் டைம் எடுத்து உழைக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ