| ADDED : மே 24, 2024 11:15 PM
கோட்டயம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், அரசு நடத்தும் கோழிப் பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்குள்ள 9,000 கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மண்ணார்காடு என்ற இடத்தில் அரசு கோழிப்பண்ணை உள்ளது. இங்கு 9,000க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நுாற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்ததை அடுத்து, மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள விலங்குகளுக்கான நோய்களை கண்டறியும் தேசிய ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.இதில், அந்த கோழிகளுக்கு எச்5என்1 எனப்படும், பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பண்ணையில் உள்ள கோழிகள் மட்டுமின்றி, 1 கி.மீ., சுற்று வட்டாரப் பகுதிகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்து, காடை உள்ளிட்ட பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், அரசு கோழிப் பண்ணையில் இருந்து 10 கி.மீ., சுற்று வட்டார பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் கோழி உள்ளிட்ட பறவைகளின் விற்பனைக்கும், இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கோழி உள்ளிட்ட பறவைகளை தாக்கும் இந்த தொற்று, மனிதர்களுக்கும் பரவக் கூடியது. பறவைகளின் எச்சம், கழிவுகள் வாயிலாக தொற்று பரவும். இந்த தொற்று மனிதர்களை தாக்கினால், காய்ச்சல், இருமல், சுவாச பிரச்னை, தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.