உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவசர நிலை அமலான ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அறிவிப்பு

அவசர நிலை அமலான ஜூன் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அறிவிப்பு

புதுடில்லி: 'நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி, இனி ஆண்டுதோறும் அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா, 1975 ஜூன் 25ம் தேதியன்று, 'எமர்ஜென்சி' எனப்படும் அவசர நிலையை அறிவித்தார். நாட்டின் கருப்பு பக்கங்கள் என விமர்சிக்கப்படும் இந்த காலக்கட்டம் 21 மாதங்கள் நீடித்தது.

கொடுமைகள்

அவசரநிலைக்கு எதிராக குரல் எழுப்பிய அரசியல் தலைவர்கள், 'மிசா' சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகளுக்கு ஆளாகினர்.எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, 49 ஆண்டுகள் முடிந்து 50வது ஆண்டு துவங்கியுள்ளது. இந்நிலையில், எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அரசிதழில், 'எமர்ஜென்சி காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசமான துஷ்பிரயோகத்தை இந்திய மக்கள் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.'அதற்காக ஜூன் 25ம் தேதியை, 'சம்விதன் ஹத்ய திவஸ்' எனப்படும், அரசியல் சாசன படுகொலை தினமாக அரசு அறிவிக்கிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

குரல் நசுக்கப்பட்டது

இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'முன்னாள் பிரதமர் இந்திரா, தன் சர்வாதிகார மனநிலையைக் காட்டி, நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தி, இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார்.'எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது.'அதனால், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினம் என அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. எமர்ஜென்சியின் வலியை அனுபவித்த அனைத்து மக்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாள் நமக்கு நினைவுபடுத்தும்' என, தெரிவித்துள்ளார்.நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நாளில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் அறிவிப்பை சாடியுள்ள காங்கிரசின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், 'கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மோடி அமல்படுத்தியிருந்தார்.'அவருக்கு தார்மிக தோல்வியை தந்த மக்கள், 2024 ஜூன் 4ம் தேதி மோடியிடமிருந்து விடுதலை பெற்றுள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை