| ADDED : ஜூன் 26, 2024 01:18 AM
புதுடில்லி, டில்லியில் ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல்வேறு இடங்களில் குடிநீர் லாரியை எதிர்பார்த்து, காலி குடங்களுடன் மக்கள் காத்திருக்கின்றனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கிடையே, டில்லிக்கு வழங்க வேண்டிய நீரை, ஹரியானா திறந்து விட வலியுறுத்தி, கடந்த 21 முதல், ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.ஐந்து நாட்களாக போராட்டம் தொடர்ந்த நிலையில், நேற்று அதிகாலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறுகையில், ''ஐந்து நாட்களாக அமைச்சர் ஆதிஷி எதுவும் சாப்பிடவில்லை. ''அவரது ரத்த சர்க்கரை அளவு, 36 ஆக குறைந்தது. டாக்டர்களின் அறிவுரைப்படி, அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.இதையடுத்து, அமைச்சர் ஆதிஷியின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வருவதாக ஆம் ஆத்மி அறிவித்தது.