புதுடில்லி: அமெரிக்காவில், நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், 81, மீண்டும் போட்டியிடுகிறார்.இவரை எதிர்த்து, முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப், 78, களம் காண்கிறார். அமெரிக்க துணை அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார். ஜனநாயகக் கட்சியிலும், ஆட்சியிலும், அதிபர் பைடனுக்கு அடுத்த இடத்தில் இவர் இருக்கிறார். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜோ பைடன், வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், அட்லாண்டாவில் நடந்த பொது விவாத நிகழ்ச்சியில், டொனால்டு டிரம்ப் கேட்ட கேள்விகளுக்கு, ஜோ பைடன் சரியாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து, அதிபர் வேட்பாளரில் இருந்து பைடனை மாற்ற வேண்டும் என, அவரது சொந்தக் கட்சியினரே குரல் கொடுத்தனர். எனினும், அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என, ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஒருவேளை தேர்தலில் இருந்து அவர் விலகினால், அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து களமிறங்கும் வாய்ப்பு, கமலா ஹாரிசுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.இதற்கிடையே, காங்., முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் தொலைபேசியில் பேசியதாக, சமீபத்தில் தகவல் பரவியது. எனினும், இதுகுறித்து இருதரப்பிலும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேசிய விவகாரத்தை, சமூக வலைதளங்களில் காங்., நிர்வாகிகள் சிலர் தம்பட்டம் அடித்துக் கொண்டனர்.இந்நிலையில், இந்த தகவலை வதந்தி என, அமெரிக்காவின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ராகுலுடன், கமலா ஹாரிஸ் பேசியதாக வெளியான தகவலை, அமெரிக்க துணை அதிபர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.