பெங்களூரு:வால்மீகி மேம்பாட்டு ஆணைய கண்காணிப்பாளர் தற்கொலை வழக்கில், அமைச்சர் நாகேந்திராவை ராஜினாமா செய்யும்படி, முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரு வசந்த்நகரில் உள்ள வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றியவர் சந்திரசேகர், 52. கடந்த மாதம் 27ம் தேதி ஷிவமொகாவில் உள்ள, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆணையத்திற்கு, அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாய் நிதியில் மோசடி நடப்பதாக, தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் சந்திரசேகர் கூறியிருந்தார். 'சஸ்பெண்ட்'
அதன் அடிப்படையில், ஆணைய நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். 187 கோடி ரூபாய் நிதியை வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றியதால், வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக, ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், ஆணைய பொது மேலாளர் ராஜசேகர் புகார் செய்தார்.இதற்கிடையில், சந்திரசேகர் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, பழங்குடியினர் நல அமைச்சர் நாகேந்திரா பதவி விலகக் கோரி, பா.ஜ., போராட்டம் நடத்தி வருகிறது. வரும் 6ம் தேதிக்குள் பதவி விலகும்படி அவருக்கு பா.ஜ., கெடு விதித்துள்ளது.இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில், முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். கெட்ட பெயர்
அப்போது, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி நாகேந்திராவிடம் கூற, இருவரும் முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணை முடிந்து தவறு இல்லை என்று தெரியவந்தால், மீண்டும் நாகேந்திராவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் முடிவு செய்தனர்.இதையடுத்து முதல்வர் சித்தராமையா, நாகேந்திராவிடம் மொபைல் போனில் பேசி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.சந்திரசேகர் தற்கொலை குறித்து விசாரணை நடப்பதால், தாமாக முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக, ஊடகங்களிடம் கூறுங்கள் என்றும், நாகேந்திராவுக்கு, முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் பதவியை நாகேந்திரா, விரைவில் ராஜினாமா செய்வது உறுதி என்று, தகவல் வெளியாகி உள்ளது. சி.பி.ஐ., விசாரணை
இதற்கிடையில் வால்மீகி மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான 187 கோடி ரூபாயில், 87 கோடி ரூபாய் வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ.,யிடம், வங்கியும் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளது.இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க முயற்சி செய்யலாம் என்பதால், அரசாக முன்வந்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.