உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு

பெங்களூரு : கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக இன்று, 14 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடப்பதால், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக, 112 இடங்களில் இருந்து, 28,257 ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 'விவிபேட்' இயந்திரங்களை பஸ்கள் மூலம், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி நேற்று வைக்கப்பட்டன.

7:00 மணி முதல்

முன்னதாக இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, தேர்தல் ஊழியர்களுக்கு அதிகாரிகள் விளக்கினர். பின், பஸ்களில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பஸ்கள் செல்லாத இடங்களுக்கு, கார்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.ஓட்டுச்சாவடிகளில், நேற்று மாலையில், அரசியல் கட்சி ஏஜன்ட்கள் முன்னிலையில், இயந்திரங்கள் வைக்கப்பட்டன. இன்று காலையில் அவர்கள் முன்னிலையில், இந்திரங்கள் செயல்படுகின்றனவா என்று சோதனை நடத்தப்படும். அதன்பின், காலை 7:00 மணி முதல், ஓட்டுப்பதிவு துவங்கும். ஓட்டுப்பதிவை, கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பூத் சிலிப் கிடைக்காதவர்கள், Voter Helpline என்ற மொபைல் போன் செயலி அல்லது https://electoralsearch.eci.gov.in/pollingstation என்ற இணையதளத்தில், வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர் எந்த வரிசையில் உள்ளது; எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டும் என்ற விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

சிறப்பு வசதிகள்

ஓட்டு சதவீதத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், 85வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.சக்கர நாற்காலி, போக்குவரத்து வசதி, உதவியாளர்கள், தனி வரிசை, சைகை காட்டும் நிபுணர்கள், பூத கண்ணாடி, குடிநீர் போன்ற வசதிகள் ஓட்டுச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன.மேற்கண்ட வசதிகள் தேவைப்படுவோர், SAKSHAM என்ற மொபைல் செயலி மூலம், இன்று மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

11 அடையாள அட்டை

வாக்காளர்களை கவரும் வகையில், மகளிர் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றும் பிங்க் பூத்கள்; பழங்குடியினருக்காக சிறப்பு பூத்கள்; மாற்றுத்திறனாளி அதிகாரிகள் மட்டுமே பணியாற்றும் சிறப்பு பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள், தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள 11 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து, ஓட்டு போடலாம்.அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போடுவதற்கு வசதியாக, தேர்தல் நடக்கும் தொகுதிகளில், இன்று ஒரு நாள் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

சுர்பூர் இடைத்தேர்தல்

யாத்கிர் மாவட்டம், சுர்பூர் - எஸ்.டி., சட்ட சபை தொகுதிக்கு, இன்று இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. பா.ஜ., சார்பில், நரசிம்ம நாயக்; காங்கிரஸ் சார்பில், ராஜா வேணுகோபால் நாயக் உட்பட ஆறு வேட்பாளர்கள் இறுதி களத்தில் உள்ளனர். 1.42 லட்சம் ஆண்கள், 1.40 லட்சம் பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 893 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி