பெங்களூரு : கர்நாடகாவில் நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு பயணியர் வருகை குறைந்து, வெறிச்சோடி காணப்படுகின்றன. 40 சதவீதம் சுற்றுலா பயணியர் வருகை குறைந்துள்ளதாக, சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டால், குடும்பத்துடன் குளிர் பிரதேசம் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் பெற்றோர் சென்று வருவர். ஆனால், வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இம்முறை பிப்ரவரி மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 44 டிகிரி
இது தொடர்பாக, சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்தாண்டை விட, இம்முறை சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 38 முதல் 44 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது.கோடை விடுமுறையில் பல்வேறு இடங்களுக்கு சென்று குதுாகலிக்கலாம் என்று குழந்தைகள் நினைத்தனர். வெயில், வெப்ப காற்றால், தங்கள் பெற்றோர், குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை.பெங்களூரில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சிக்கபல்லாபூர் நந்தி மலைக்கு கூட இம்முறை செல்வதை பெற்றோர் தவிர்த்துள்ளனர். இதற்கு ஒரே காரணம் வெப்பம் மட்டுமே.இம்மாவட்டத்தில் அவலகுர்கி அருகில் ஈஷா அறக்கட்டளை சார்பில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது. கடந்தாண்டு இங்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்திருந்தது. ஆனால் இம்முறை குறைந்துஉள்ளது.அத்துடன் நந்திகிரி, சந்திரகிரி, பிரம்மகிரி, ஹேமகிரி மலை உட்பட பல சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணியர் வருகை குறைந்துள்ளது. தேர்தல் பணி
கோடை காலத்தில் குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த அரசு ஊழியர்களும், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்ததும் செல்லலாம் என நினைத்திருந்தனர்.ஆனால், தற்போது கர்நாடக மேலவை தென்கிழக்கு ஆசிரியர்கள் இடங்களுக்கான எம்.எல்.சி., தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இத்தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால், குழந்தைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.அதுபோன்று கடந்தாண்டு பெண்கள் அரசு பஸ்களில் 'சக்தி' திட்டத்தின் மூலம், இலவசமாக கோவில்களுக்கு பயணித்து வந்தனர். ஆனால், வெயிலின் தாக்கம் காரணமாக, பெண்கள் வருகையும் குறைந்து, ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களிலும் 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். மீண்டும் பாதிப்பு
கடந்த 2020, 21, 22ம் ஆண்டுகளில் கொரோனா தொற்றால், சுற்றுலா துறை கடுமையான பாதிப்பை சந்தித்தது. அதன்பின் மெல்ல மெல்ல சுற்றுலா துறை மீண்டது. தற்போது மீண்டும் அதே சூழ்நிலை துவங்கி உள்ளது. இம்முறை வெயிலின் தாக்கம், சுற்றுலா துறையை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.