| ADDED : ஜூன் 14, 2024 02:11 AM
பாண்டவ்நகர்: பட்டயக் கணக்காளரிடம் வேலை செய்யும் இருவரிடம் துப்பாக்கி முனையில் 50 லட்சம் ரூபாயை நான்கு பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.காஜியாபாத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளரிடம் மோகித் சர்மா, அருண் தியாகி ஆகிய இருவரும் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிற்பகல் மேற்கு டில்லியில் ஒருவரிடம் 50 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு காஜியாபாத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.கிழக்கு டில்லி, அக்ஷர்தாம் கோவில் அருகே இருவரும் வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் வழிமறித்தனர்.சூழ்நிலையை உணர்ந்த இருவரும் தப்ப முயன்றபோது, மோட்டார் சைக்கிள்களால் இருவரும் மறிக்கப்பட்டனர். நால்வரில் ஒருவர் துப்பாக்கி முனையில் மோகித் சர்மா, அருண் தியாகியை மிரட்டி, தாக்கினார். இருவரும் கீழே விழுந்து கொள்ளையருடன் உருண்டு புரண்டனர்.அந்த நேரத்தை பயன்படுத்தி மற்ற மூவரும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஒரு கொள்ளையனை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.