உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாத்ரஸ் நெரிசலுக்கு சதி காரணம் விசாரணை அறிக்கையில் பரபரப்பு

ஹாத்ரஸ் நெரிசலுக்கு சதி காரணம் விசாரணை அறிக்கையில் பரபரப்பு

லக்னோ, :ஹாத்ரஸ் ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பாக விசாரித்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தவறு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.மேலும், இந்த சம்பவத்தில் மிகப்பெரிய சதி இருந்திருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

சொற்பொழிவு நிகழ்ச்சி

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில், ஆன்மிகவாதி போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், 121 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரஜேஷ் குமார் ஸ்ரீவத்சவா, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் ராவ் தலைமையில் நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுஉள்ளது.இதைத் தவிர, ஆக்ரா மண்டல கூடுதல் டி.ஜி.பி., அனுபவம் குல்ஸ்ரேஸ்தா, அலிகார் மண்டல கமிஷனர் சைத்ரா அடங்கிய எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியது.மேலும், கூட்ட நெரிசல் நடந்த பகுதியிலும் ஆய்வு செய்தது. ஊடகங்களில் வெளியான செய்திகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.இந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது குறித்து அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாவது:ஹாத்ரஸ் ஆன்மிக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகவும் மெத்தனமாக நடந்துள்ளனர். உரிய தகவல்களை அளிக்கவில்லை அல்லது தகவல்களை மறைத்துள்ளனர். மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை. இந்தளவுக்கு மக்கள் கூடுவர் என்று எதிர்பார்த்த நிலையில், போதிய தடுப்புகள் அமைத்து, வரிசைகளை ஒழுங்குபடுத்த தவறிவிட்டனர்.முன்னதாக இந்த இடத்தில் ஆய்வு செய்ய வந்த போலீசாரிடம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவறாக நடந்துள்ளனர். அவர்களை ஆய்வு செய்ய அனுமதிக்காத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக, சப் - கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளனர். நேரில் ஆய்வு செய்யாமல், நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் அளித்ததுடன், அது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

ஒழுங்கு நடவடிக்கை

தங்கள் கடமையை செய்யத் தவறிய, சப் - கலெக்டர் உள்ளிட்ட, அந்தப் பகுதி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சம்பவத்தில், மிகப்பெரிய சதி இருந்திருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என, சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து சப் - கலெக்டர், அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி, தாசில்தார் உட்பட, ஆறு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை