| ADDED : ஜூன் 14, 2024 12:23 AM
மும்பை, 'ஆன்லைன்' வாயிலாக, 'ஆர்டர்' செய்த கோன் ஐஸ்கிரீம் உள்ளே மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் டாக்டர் ஓர்லெம் பிரெண்டன் செராவ், 26. மும்பையின் மலாட் பகுதியில் வசித்து வருகிறார். மளிகை பொருட்களை வீட்டுக்கு எடுத்து வந்து தரும், 'ஆன்லைன்' செயலி வாயிலாக, டாக்டரின் சகோதரி சில பொருட்களை நேற்று முன் தினம் ஆர்டர் செய்தார். அத்துடன், 'யம்மோ' என்ற நிறுவன தயாரிப்பான, 'பட்டர்ஸ்காட்ச்' கோன் ஐஸ்கிரீமும் ஆர்டர் செய்துள்ளனர்.மதிய உணவுக்கு பின், டாக்டர் ஓர்லெம் அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டார். பாதி ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்தபின் உள்ளே வித்தியாசமான பொருள் தட்டுப்பட்டது. அது என்னவென்று எடுத்து பார்த்தபோது, 1.25 செ.மீ., அளவுக்கு சதைத்துண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது நகத்துடன் இருந்ததால், மனித விரல் என்பது தெரியவந்தது. உடனே, ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்திடம், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகம் வாயிலாக புகார் அளித்தார். அந்த நிறுவனத்திடம் இருந்து பதில் வராததால் போலீசில் புகார் அளித்தார். ஐஸ்கிரீமில் இருந்தது மனித விரல் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதை தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யம்மோ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.