உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விகிதம் 10 சதவீதம் குறைவு அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விகிதம் 10 சதவீதம் குறைவு அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை

பெங்களூரு, - கர்நாடகாவில் இம்முறை எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், 73.40 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட, இது 10 சதவீதம் குறைவு. பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த மொரார்ஜி தேசாய் அரசு உறைவிட பள்ளி மாணவி அங்கிதா, 625க்கு 625 மதிப்பெண் எடுத்து, மாநில அளவில், முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கர்நாடகாவில் 2023 - 24ம் ஆண்டிற்கான, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு கடந்த மார்ச் 25 முதல், ஏப்ரல் 6ம் தேதி வரை, 2,750 மையங்களில் நடத்தப்பட்டது. மாநிலம் முழுதும், 8,59,967 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். ஏப்ரல் 15 முதல், 24ம் தேதி வரை மாநிலத்தின் 35 கல்வி மாவட்டங்களில் உள்ள 237 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 61,160 ஆசிரியர்கள், விடைத்தாள்களை திருத்தினர்.

73.40 சதவீதம் தேர்ச்சி

இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பெண் வாரிய அலுவலகத்தில் வாரிய தலைவர் மஞ்சுஸ்ரீ, நேற்று தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.பின், அவர் கூறியதாவது:கர்நாடகாவில், இம்முறை 8,59,967 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 6,31,204 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 73.40 சதவீதம் ஆகும். மாணவியர் 81.11 சதவீதமும்; மாணவர்கள் 65.90 சதவீத பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2,288 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 34 பள்ளிகளில் பூஜ்ய சதவீத முடிவுகள் வந்துள்ளது.

உடுப்பிக்கு முதலிடம்

இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து மாற்று ஏற்பாடு செய்ய வழிவகை வகுக்கப்படும். மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களுக்கு, தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், https://karresults.nic.inஎன்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.தேர்ச்சி சதவீதத்தை அடிப்படையாக கொண்டு, 35 கல்வி மாவட்டங்களுக்கு, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், உடுப்பி 94 சதவீதத்துடன் முதல் இடத்தையும்; யாத்கிர் 50.59 சதவீதத்துடன் 35வது இடத்தையும் பிடித்துள்ளது.கர்நாடகாவில் நடப்பாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கு, மூன்று பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இன்று, முதல் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

ஜூன் 7ல் 2ம் தேர்வு

இதில், தேர்ச்சி பெறும் மாணவர்கள், தங்களுக்கு குறைவான மதிப்பெண் வந்துள்ளது என்று நினைத்தால், இரண்டாவது முறை மீண்டும் எழுதலாம். அதிலும், குறைவாக வந்தது என்று நினைத்தால், மூன்றாவது முறையும் எழுதலாம்.தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் இரண்டாவது, மூன்றாவது தேர்வை எழுதலாம். ஜூன் 7ம் தேதி முதல், 14ம் தேதி வரை, எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாம் தேர்வு நடக்கும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்ச்சி பெறாதவர்கள், துவண்டு விடாமல் துணை தேர்வை எழுதலாம்.பாகல்கோட் மாவட்டம், முதோலில் உள்ள மொரார்ஜி தேசாய் அரசு உறைவிடப் பள்ளி மாணவி அங்கிதா பசப்பா கொன்னுார், 625க்கு 625 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மறுகூட்டல்

விடைத்தாள் நகல் பெறுவதற்கு, வரும் 16ம் தேதி வரையிலும்; மறுகூட்டல், மீண்டும் திருத்துவதற்கு வரும் 13ம் தேதி முதல், 22ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.வழக்கமாக தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, குறைந்தபட்சம் 35 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் போதுமானதாக இருந்தது. இம்முறை, 25 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டது. மேலும், 2024ல் நடக்கும் மூன்று தேர்வுக்கும், அனைத்து பாடங்களுக்கும் கருணை மதிப்பெண், 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, ஊக்குவிக்கவும் கல்வி துறை தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயி மகள்

கடந்த 2022 - 23ல், 83.89 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இம்முறை கருணை மதிப்பெண் கூடுதலாக வழங்கியும், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் குறைத்தும், வெறும் 73.40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்தாண்டை விட 10 சதவீதம் குறைவு. அரசின் அக்கறையின்மையே இதற்கு முழு காரணம் என்று பேசப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கிய தேர்வு ஆகும். இதிலேயே தேர்ச்சி சதவீதம் குறைந்திருப்பது, பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்தும்.இதற்கிடையில், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள அங்கிதா, பசப்பா - கீதா தம்பதியின் மகள். தந்தை ஒரு விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ