தார்வாட்: 'சக்தி' திட்டத்தால் பெண்கள் பயனடைந்து வருவதாக கூறும் கர்நாடக காங்கிரஸ் அரசு, என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., நிர்வாகத்துக்கான தொகை 298 கோடி ரூபாய் வழங்காமல் நிலுவையில் வைத்து உள்ளது.கர்நாடகாவில் கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., - என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., - கே.கே.கே.ஆர்.டி.சி., ஆகிய போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன.இதில் என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., எனும் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழக பஸ்கள் பெலகாவி, தார்வாட், உத்தர கன்னடா, பாகல்கோட், கதக், ஹாவேரி ஆகிய மாவட்டங்களில் இயக்கப்படுகின்றன. சக்தி திட்டம்
கர்நாடகாவில் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்க 'சக்தி' திட்டத்தை, காங்கிரஸ் அரசு அமல்படுத்தியது. இதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதில் பயணிக்கும் பெண்களுக்கு 'பூஜ்ஜிய' டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், இக்கழகங்களுக்கு, மாநில அரசு மாதந்தோறும், டிக்கெட் கட்டண தொகையை விடுவித்து வருகிறது. என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி.,ன் கீழ், தினமும் 14 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இக்கழகத்துக்கு, 2023 ஜூன் 11ம் தேதி முதல் இதுவரை முழு தொகையும் அரசு வழங்கவில்லை. மாதந்தோறும் 15 முதல் 40 கோடி ரூபாய் நிலுவை வைத்தே வழங்கி வருகிறது. ரூ.895 கோடி
ஏப்ரல் இறுதி வரை 46 கோடியே 42 லட்சத்து 11 ஆயிரத்து 425 பெண்களுக்கு, 'பூஜ்ஜிய' டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், 1,193 கோடியே 86 லட்சத்து 33 ஆயிரத்து 524 ரூபாய் தொகையை அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 894 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை மட்டும் அரசு வழங்கி உள்ளது. 298 கோடியே 95 லட்சத்து 81 ஆயிரத்து 524 ரூபாய் அரசு நிலுவை வைத்து உள்ளது.என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனர் பிரியங்கா கூறுகையில், ''சக்தி திட்டத்தின் கீழ், தினமும் 14 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இதுவரை 290 கோடி ரூபாய்க்கு மேல் தொகை நிலுவை உள்ளது. ஆயினும், அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார்.