கோலார் : கோலார் நகராட்சிப்பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை என கூறி, நகராட்சி ஆணையர் சிவானந்த் அறையின் முன் பா.ஜ., - ம.ஜ.த., கவுன்சிலர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.கோலார் நகராட்சி பகுதியில் மக்கள் பிரச்னைகள் குறித்து பல முறை வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை என்ற புகார் உள்ளது. இதனால் நகராட்சி ஆணையர் அலுவலகம் முன் நேற்று பா.ஜ., - ம.ஜ.த., கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 'உங்கள் பிரச்னைகள் கவனிக்கப்படும்' என, ஆணையர் உறுதி அளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது.போராட்டத்திற்கு பின் பா.ஜ., கவுன்சிலர்கள் முரளி கவுடா, பிரவீன் கவுடா அளித்த பேட்டி:கோலார் நகராட்சியில் பொதுமக்கள் மனு மீது அதிகாரிகள் எந்த ஒரு வேலையும் நடப்பதில்லை. ஊழியர்கள் மனிதநேயமே இல்லாமல் நடந்து கொள்கின்றனர். பதவி காலம்
நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்காலம் முடிந்து ஓராண்டு ஆகிறது. கோலார் மாவட்ட கலெக்டருக்கு நிர்வாக அதிகாரியாக அரசு அதிகாரம் அளித்துள்ளது. வாரந்தோறும் நகராட்சிக்கு வந்து அதிகாரிகளை அழைத்து, அவர்கள் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். ஆனால், மாவட்ட கலெக்டரோ, தன் அலுவலகத்தில் இருந்தே செயல்படுகிறார்.மக்கள் பிரச்னைகள் பற்றி நகராட்சி ஆணையர் அக்கறை செலுத்துவதே இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் வருவதே இல்லை. ஓட்டல்களில் அமர்ந்து, நகராட்சி கோப்புகளை கவனிக்கின்றனர். இடைத்தரகர் வேலைகள் மட்டுமே விரைவாக நடக்கிறது. நகராட்சி கவுன்சிலர்கள் பேச்சுக்கு மரியாதையே இல்லை.வீட்டு மனை பட்டா மாற்றம், வரி செலுத்துதல், வர்த்தக உரிமம், ஆவணங்கள் திருத்தம் என எந்த மனு மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை. பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் பெரும் முறைகேடு நடந்து வருகிறது. பதில் சொல்வது யார்?
கோலாரில் பல வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சியின் 'சஹாய வாணி' பிரிவுக்கு போன் செய்தால் பதில் சொல்ல யாருமில்லை. பொறியாளர்களுக்கு அரசு பணியை காட்டிலும் வெளி வேலைகளே முக்கியமாகிவிட்டது.எரகோள் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து நீர் வீணாகிறது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவே இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.ம.ஜ.த., கவுன்சிலர்கள் நாஜியா பாபா ஜான், சங்கீதா ஆகியோரும் உடனிருந்தனர்.