| ADDED : ஜூலை 11, 2024 04:46 AM
பெங்களூரு, : 'பெங்களூரில் அதிகாலை 2:00 மணி வரை, ஹோட்டல்கள் திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும். இதுகுறித்து, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்' என, ஹோட்டல் உரிமையாளர்கள் அசோசியேஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.பெங்களூரு ஹோட்டல் அசோசியேஷன் தலைவர் பி.சி.ராவ் கூறியதாவது:பெங்களூரில் பப்கள், பார்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களை, அதிகாலை 2:00 மணி வரை திறந்திருக்க, அனுமதி அளிக்க வேண்டும் என, அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதுதொடர்பாக, முதல்வர், துணை முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளோம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும். தற்போது அதிகாலை 1:00 மணி வரை, திறந்திருக்க அனுமதி உள்ளது. கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்க வேண்டும்.கடந்த 10 மாதங்களுக்கு முன், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் அருகில் உள்ள ஹோட்டல்கள், தினம் 24 மணி நேரம் திறந்திருக்க அனுமதி அளிக்கும்படி கோரினோம். நள்ளிரவு வெளியூர்களில் இருந்து வந்திறங்கும் பயணியர், இரவு ஷிப்ட் பணி முடிந்து வரும் ஊழியர்கள், உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.ஹோட்டல்கள் திறந்திருந்தால் இவர்களுக்கு உதவியாக இருக்கும். எனவே ஹோட்டல் மூடும் நேரத்தை, 1:00 மணியில் இருந்து, 2:00 மணியாக அதிகரிக்க வேண்டும்.மத்திய அரசு பட்ஜெட் வரும் 23ல் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் எங்களின் ஆலோசனைகளை பெறும்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளோம். ஹோட்டல் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். உரிமம் பெறும் விதிகளை எளிதாக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.