மேலும் செய்திகள்
உலக கோப்பை ஸ்குவாஷ்: இந்தியா ‛சாம்பியன்
1 hour(s) ago
வயநாடு: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட, அத்தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யான, காங்., முன்னாள் தலைவர் ராகுல், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ, அப்படி தான் வாக்காளர்களையும் நினைப்பதாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 20 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும் 26ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்., முன்னாள் தலைவர் ராகுல், நான்கு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வரும் லோக்சபா தேர்தலிலும், இதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். சாலை பேரணி
வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து, இ.கம்யூ., பொதுச்செயலர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, கேரள பா.ஜ., தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட, அத்தொகுதியின் சிட்டிங் எம்.பி., ராகுல், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், அவரது சகோதரியும், காங்., பொதுச் செயலருமான பிரியங்கா, கட்சி பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.நேற்று காலை ஹெலிகாப்டர் வாயிலாக வயநாடு வந்த ராகுல், வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன், கல்பெட்டாவில் இருந்து சிவில் ஸ்டேஷன் வரை சாலைப் பேரணி நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான காங்., தொண்டர்கள் பங்கேற்றனர்.அங்கு திரண்டிருந்த பொது மக்களிடையே ராகுல் பேசியதாவது:வயநாடு மக்களின் பெரும் ஆதரவுக்கு நன்றி. உங்களின் எம்.பி.,யாக இருப்பது, எனக்கு கிடைத்த பெருமை. நான் உங்களை வாக்காளராக நினைக்கவில்லை. என் சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ அப்படி தான் உங்களையும் நினைக்கிறேன். எனவே வயநாட்டின் வீடுகளில் எனக்கு சகோதரிகள், அம்மாக்கள், அப்பாக்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளனர். இதற்கு என் இதயங்கனித்த நன்றி. நான் முதன்முதலில் வயநாடு தொகுதிக்கு வந்த போது, அரசியல் சார்புகள், சமூக வேறுபாடுகள் போன்றவற்றை பொருட்படுத்தாமல், நீங்கள் என் மீது அன்பு மழை பொழிந்தீர்கள். இதை என்னால் மறக்க முடியாது. பிரச்னைகளுக்கு தீர்வு
வயநாட்டில் மனித- - விலங்கு மோதல்கள், இரவு நேர பயணப் பிரச்னை, நல்ல மருத்துவக் கல்லுாரி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இத்தொகுதி மக்கள் எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்னைகளில், வயநாடு மக்களுடன் நான் துணை நிற்கிறேன். இந்த பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்தியிலும், கேரளாவிலும் காங்., அரசு அமையும் போது இந்த இரு பிரச்னைகளும் தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.வேட்புமனு தாக்கல் செய்த பின், செய்தியாளர்களிடம் ராகுல் கூறியதாவது:பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த பலர், அரசியலமைப்புச் சட்டத்தையும், நாட்டில் உள்ள ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கின்றனர். அவர்களிடம் இருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல் இது. நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் தான், காங்கிரசும், 'இண்டியா' கூட்டணி கட்சிகளும், பா.ஜ.,வுக்கு எதிராக போராடி வருகின்றன. இத்தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago