| ADDED : ஜூன் 26, 2024 08:50 AM
பீதர் : ''முஸ்லிம் ஓட்டுகளால் தான் சாகர் கன்ட்ரே பீதர் எம்.பி., ஆனார்,'' என்று, அமைச்சர் ஜமீர் அகமது கான் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.கர்நாடக வீட்டு வசதி, வக்பு அமைச்சராக இருப்பவர் ஜமீர் அகமது கான். இவர் நேற்று பீதரில் நடந்த வக்பு அதாலத் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முஸ்லிம் ஒருவர், 'நமது சமூகத்தில் யாராவது இருந்தால் அவர்களின் உடலை புதைக்க இடமில்லை. மயான வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.அவருக்கு ஜமீர் அகமது கான் பதில் அளிக்கையில், 'பீதர் காங்கிரஸ் எம்.பி., சாகர் கன்ட்ரே முஸ்லிம் ஓட்டுகளால் தான் வெற்றி பெற்றுள்ளார்.நமது சமூகத்திற்கு என்ன தேவையோ அது பற்றி அவரிடம் பேசுகிறேன்' என்றார்.முஸ்லிம் ஓட்டுகளால் சாகர் கன்ட்ரே வெற்றி பெற்றதாக, ஜமீர் அகமது கான் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது கருத்துக்கு பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சமூகத்தை திருப்திபடுத்த, எம்.பி.,யை அவமதித்து விட்டதாக கூறினர்.இதனால் ஜமீர் அகமது கான் யூ- டர்ன் அடித்துள்ளார். அவர் கூறியதாவது:முஸ்லிம் ஓட்டுகளால் மட்டும் சாகர் கன்ட்ரே வெற்றி பெற்றார் என்று நான் கூறவில்லை. முஸ்லிம்கள் முழுதுமாக காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தனர் என்று தான் கூறினேன். சாகர் 6 லட்சத்திற்கு மேல் ஓட்டு வாங்கி உள்ளார். அவருக்கு 2 லட்சம் முஸ்லிம் ஓட்டுகள் விழுந்துள்ளது. முஸ்லிம்கள் மட்டும் ஓட்டு போட்டு இருந்தால், அவரால் வெற்றி பெற்றிருக்க முடியுமா.இவ்வாறு அவர் கூறினார்.ஜமீர் அகமது கான் சர்ச்சையாக பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடந்த போது, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த ஜமீர் அகமது கான், 'முஸ்லிம்களுக்கு அரசியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி காங்கிரஸ். 'கர்நாடகா சபாநாயகர் காதர் முஸ்லிம். அவருக்கு பா.ஜ.,வினர் வணக்கம் வைப்பதுடன், சார் என்று மரியாதையாக அழைக்கின்றனர்' என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.