உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிகளுக்கு மாணவர் வருகை குறைவு

பள்ளிகளுக்கு மாணவர் வருகை குறைவு

புதுடில்லி:டில்லி - என்.சி.ஆர்., பிராந்தியத்தில் நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டலுக்கு அடுத்த நாளான நேற்று பள்ளிகளுக்கு மாணவர் வருகை பெருமளவில் குறைந்திருந்தது.டில்லி - என்.சி.ஆர்., பிராந்தியத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமையன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அனைவரும் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.டில்லி - என்.சி.ஆர்., பகுதியில் மிரட்டல் வந்த எந்த ஒரு பள்ளியும் புதன்கிழமை இயங்கவில்லை. ஒரே நேரத்தில் வந்த மிரட்டலால் நகரில் பீதி நிலவியது.போலீசாரின் பல மணி நேர சோதனைக்குப் பின், மின்னஞ்சல் மிரட்டல் புரளி என்பதை உறுதி செய்தனர். சில பள்ளிகளில் இருந்து சந்தேகத்திற்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பரவி வரும் தகவல்களை போலீசார் மறுத்துள்ளனர். தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாமென எச்சரித்துள்ளனர்.இதற்கிடையில் டில்லி - என்.சி.ஆர்., பிராந்தியத்தில் நேற்று காலை வழக்கம்போல் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர் வருகை வழக்கம்போல் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில் 15 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் நேற்று வரவில்லை.வெடிகுண்டு மிரட்டல் வராத பள்ளிகளிலும் மாணவர் வருகை குறைவாக இருந்ததாக தகவல் வெளியானது. மிரட்டல் காரணமாக நேற்றும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு சிலர் அனுப்பாதது தெரிய வந்தது.பெயர் வெளியிட விரும்பாத ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது:எங்கள் பள்ளிக்கு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கிடைத்து, பள்ளிக் கதவை திறக்கும் முன்பு ஆவேசமடைந்துவிட்டனர்.எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் பள்ளி நிர்வாகத்திற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கும்படி மாணவர்களின் பெற்றோருக்கு மின்னஞ்சல் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.தங்கள் குழந்தைகளுக்கும் தேவையான அறிவுரை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளேன்.எங்கள் பள்ளியில் 2,700 மாணவ, மாணவியர் இருக்கும் சூழ்நிலையில் ஒட்டு மொத்தமாக அனைவரையும் பதற்றத்துடன் வெளியே எப்படி அனுப்ப முடியும்?குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்திருப்பது, அவர்களின் பெற்றோர் தானா என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே நாங்கள் அவர்களுடன் அனுப்பி வைத்தோம். பெற்றோரின் அடையாள அட்டையை சரிபார்த்த பிறகு, கையொப்பம் பெற்றுக் கொண்ட பிறகே மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.துவாரகாவில் உள்ள ஐ.டி.எல்., பப்ளிக் பள்ளியின் முதல்வர் சுதா ஆச்சார்யா கூறுகையில், “பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் பீதியுடனும் கவலையுடனும் உள்ளனர். வழக்கமாக 95 முதல் 97 சதவீதமாக இருந்த மாணவர்களின் வருகை இன்று (நேற்று) 85 சதவீதமாக குறைந்துள்ளது,” என்றார்.ஏறக்குறைய 250 தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சுதா ஆச்சார்யா, பெரும்பாலான பள்ளிகளிலும் மாணவர் வருகை வெகுவாக குறைந்திருந்ததை உறுதி செய்தார்.இதையடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவது குறித்து பள்ளி முதல்வர்கள் யோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர்.வெடிகுண்டு மிரட்டலால் மாணவர் வருகை மிகவும் பாதித்தது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஒத்திகை நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தி, மாணவர்களையும் பள்ளி நிர்வாகங்களையும் வழிநடத்தும்படி பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.ஜோதி அரோரா,முதல்வர் மவுன்ட்அபு பள்ளி.

தடயங்களை அழிக்ககுற்றவாளிகள் முயற்சி

டில்லி - என்.சி.ஆர்., பிராந்திய பள்ளிகளில் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தியவர்கள், தடயத்தை அழிக்க முயற்சி செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையை குழப்பவும் திசை திருப்பவும் குற்றவாளிகள் முயற்சி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மின்னஞ்சல் அனுப்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மின்னணு தடயங்களை அழிக்க குற்றவாளிகள் முயற்சி செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதற்கிடையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, டில்லி காவல் துறைக்கு துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தல் வேளையில் மக்களை பீதியடையச் செய்ய வேண்டும் என்பதே குற்றவாளிகளின் நோக்கமாக இருந்திருக்க வேண்டுமென, வெடிகுண்டு மிரட்டல் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் டில்லி போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.'வாட்ஸாப் குழுக்களில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என, டில்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ