டாக்டர் படுகொலை வழக்கின் சி.பி.ஐ., அறிக்கையில்...அதிர்ச்சி தகவல்!
புதுடில்லி, கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சரியான பாதையில் விசாரணை நடப்பதாகக் கூறியுள்ள அமர்வு, இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளது. அதனால், அவற்றை வெளிப்படுத்த இயலாது என்றும் கூறியுள்ளது. மேலும், மருத்துவமனையின் பாதுகாப்புக்கு தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்களை நியமித்த மேற்கு வங்க அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.கடந்த மாதம் 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கடந்த மாதம் 15ம் தேதியில் இருந்து இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.விரிவான விசாரணைமருத்துவக் கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., சார்பில், வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து அமர்வு கூறியதாவது:சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே, சி.பி.ஐ., விசாரணையை துவங்கியது. அதற்குள், சம்பவ இடத்தில் ஆதாரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இருந்தபோதும், சி.பி.ஐ., தன் விசாரணையை சிறப்பாக செய்துள்ளது. பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பாக மட்டுமல்லாமல், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் எழுப்பிய பல கவலைகள், கருத்துகளும் கவனத்தில் கொண்டு விரிவான விசாரணை நடந்துள்ளது, விசாரணை அறிக்கையில் இருந்து தெரிகிறது.இந்த விசாரணை அறிக்கையில் உள்ள பல தகவல்கள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இந்தத் தகவல்களை வெளியிட்டால், இதில் தொடர்புடையோர் உஷாராகிவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.கடிதம்விசாரணையையும் அது பாதிக்கும். அதனால், இந்த அறிக்கையின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும்.கொல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் தந்தை, தன் மகளின் மரணம் தொடர்பான பல தகவல்களை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அது குறித்தும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.அதுபோல், சம்பவம் நடந்த தினத்தில், விசாரணைக்கு தொடர்பில்லாத பலர் அங்கு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்தும் ஆராய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியது. நேரடி ஒளிபரப்பு
நேற்றைய விசாரணையின் போது, “இந்த வழக்கின் விசாரணையை நேரடியாக ஒளிபரப்புவதில் சிக்கல்கள் உள்ளன. எங்கள் தரப்பில் ஆஜராகும் பெண் வழக்கறிஞர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே, நேரடி ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும்,” என, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டார்.இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், 'இது மிகவும் முக்கியமான வழக்கு. விசாரணை எப்படி நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். 'எனவே நேரடி ஒளிபரப்புக்கு தடை விதிக்க முடியாது. வழக்கறிஞர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த நீதிமன்றத்துக்கு உள்ளது' என்றனர்.மேலும், தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள, பலியான பெண் டாக்டரின் புகைப்படம் மற்றும் பெயர்களை நீக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மருத்துவமனையின் பாதுகாப்புக்கு தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்களை நியமித்த மேற்கு வங்க அரசுக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, பயிற்சி டாக்டர் கொலை வழக்கில், முதல்வர் மம்தா பானர்ஜியை ராஜினாமா செய்ய உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இரவு பணி கூடாதா?
விசாரணையின்போது, பல்வேறு விஷயங்கள் தொடர்பான கேள்விகளை அமர்வு எழுப்பியிருந்தது. பெண் டாக்டர்கள் பாதுகாப்பு தொடர்பாக மேற்கு வங்க அரசு பிறப்பித்துள்ள சில உத்தரவுகள் தொடர்பாக அமர்வு கூறியுள்ளதாவது:பெண் டாக்டர்கள் பாதுகாப்பைக் கருதி, 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது, இரவுப் பணி கூடாது என அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும். பெண்கள் சம வேலை, சம உரிமை கோருகின்றனர். வேலை செய்வதற்கும் தயாராக உள்ளனர். அதற்கு தேவையான வசதிகள், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியது.
சலான் இல்லை!
பிரேத பரிசோதனைக்கு உடலை ஒப்படைக்கும்போது, அதனுடன், 'சலான்' என்ற ஆவணத்தை அளிக்க வேண்டும். இந்த ஆவணத்தில்தான், உடலில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற விபரங்கள் இருக்கும். இந்த ஆவணம் ஒப்படைக்கப்பட்டதா என, கடந்த விசாரணையின்போது அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது.நேற்று நடந்த விசாரணையின்போது, மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “1997ல் இருந்து, சலான் வழங்கும் நடைமுறை, மேற்கு வங்கத்தில் பின்பற்றப்படுவதில்லை. இந்த சம்பவத்திலும், சலான் வழங்கப்படவில்லை,” என குறிப்பிட்டார்.இதற்கு, அதிர்ச்சி தெரிவித்த அமர்வு, 'சட்டப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படாதது ஏன்?' என, கேள்வி எழுப்பியது. இந்த பதில் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அமர்வு, இது தொடர்பாகவும் சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டது.