உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேபினட் செயலராக சோமநாதன் நியமனம்

கேபினட் செயலராக சோமநாதன் நியமனம்

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதித்துறை செயலர் டி.வி. சோமநாதன், அடுத்த கேபினட் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அரசில் மிகவும் முக்கிய மற்றும் உயரிய பதவியாக கேபினட் செயலர் பதவி உள்ளது. தற்போது கேபினட் செயலராக உள்ள ராஜிவ் கவுபாவின், ஐந்தாண்டு பதவிக்காலம் இந்த மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கேபினட் செயலராக, நிதித்துறை செயலர் டி.வி. சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.கேபினட் செயலர் பதவியை ஏற்கும் வரை, கேபினட் செயலகத்தில் சிறப்பு அதிகாரியாக அவர் இருப்பார் என, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன், இந்த பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின், 1987 கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான டி.வி. சோமநாதன், தமிழக அரசில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நிர்வாக இயக்குனராகவும் பதவி வகித்தார்.கோல்கட்டா பல்கலையில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், சி.ஏ., - காஸ்ட் அக்கவுன்டன்ட் மற்றும் கம்பெனி செகரெட்டரி படிப்புகளையும் முடித்தவர். பொருளாதாரம் தொடர்பாக, 80க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கியின் இயக்குனராக அயல்பணியிலும் இருந்தார். கடந்த 2021ல், மத்திய அரசின் நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன், 2015 - 2017ல் கூட்டுறவு விவகாரங்கள் துறை இணைச் செயலராக இருந்தார். பிரதமர் அலுவலகத்தில், பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தும் பிரிவை கவனித்து வந்தார். தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொள்கையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராகவும் உள்ளார். மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன், 1989ல் கேபினட் செயலராக பதவி வகித்தார். அவருக்குப் பின், அந்தப் பதவிக்கு தமிழக ஐ.ஏ.எஸ்., கேடர் அதிகாரி ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி