| ADDED : ஜூலை 10, 2024 11:23 PM
புதுச்சேரி:புதுச்சேரி வணிகவரி துறையில் போலி பில்களை சமர்பித்து ரூ.11.49 கோடி மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி பண்டசோழநல்லுார், சொரப்பூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சரவணன். இவரது பெயரில் சரவணன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனமும், கரியமாணிக்கம், திருமண நிலைய வீதியைச் சேர்ந்த செல்வமுருகன் பெயரில் செல்வமுருகன் எண்டர்பிரைசஸ் என்ற இரு நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவக்கப்பட்டுள்ளன. இருவரின் பான் கார்டு உள்ளிட்ட தகவல்களை அளித்து நிறுவனங்கள் துவக்கப்பட்டு உள்ளன.இவ்விரு கம்பெனிகளுக்கு வடமாநிலத்தில் இருந்து இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வந்த இரும்பு கழிவுகள் மீண்டும் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் இவ்விரு கம்பெனிகளிலும் பல கோடிக்கு வர்த்தகம் நடந்தது.வர்த்தகத்திற்கான இ-வே பில்களை ஜி.எஸ்.டி., இணையதளத்தில் சமர்ப்பித்துள்ளனர். அவை போலியாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து புதுச்சேரி வணிக வரித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சரவணன் எண்டர்பிரைசஸ், செல்வமுருகன் எண்டர்பிரைசஸ் என்ற இரு நிறுவனங்களும் கரியமாணிக்கம் பகுதியில் இல்லாதது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.புதுச்சேரியில் இல்லாத இரு கம்பெனிகள் பெயரில் பொருட்கள் விற்பனை செய்ததுபோல் போலி பில்களை ஆன்லைனில் சமர்ப்பித்து வரி சலுகை பெற்று மாநில வணிக வரித்துறையில் ரூ. 11.49 கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சரவணன் மற்றும் செல்வமுருகன் இருவரும் ஆன்லைனில் கடன் பெற கடந்த ஆண்டு விண்ணப்பித்தனர். அப்போது, கேட்கப்பட்ட பான் கார்டு, ஆதார், ஓ.டி.பி.க்களை பகிர்ந்துள்ளனர். அதன் மூலம் போலியான பில்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டது யார் என சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.