உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிட் பண்ட் நிறுவன அதிகாரியின் உடலை கூறு போட்ட கொடூரம்

சிட் பண்ட் நிறுவன அதிகாரியின் உடலை கூறு போட்ட கொடூரம்

ராமமூர்த்திநகர் : ஐந்து லட்சம் ரூபாயை ஏமாற்றியதால், 'சிட் பண்ட்' நிறுவன ஊழியரை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியவர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு, சம்பிகேஹள்ளி அஞ்சனாத்ரி லே - அவுட்டில் வசித்தவர் ஸ்ரீநாத், 34. பசவேஸ்வராநகரில் உள்ள 'சிட் பண்ட்' நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த மாதம் 28ம் தேதி காலை, வெளியே சென்று வருவதாக, மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டார்.அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.சம்பிகேஹள்ளி போலீசில், கணவரை காணவில்லை என்று, மனைவி புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ராமமூர்த்திநகர் விஜினாபுராவில் வசிக்கும் மாதவராவ், 35, என்பவர் வீட்டிற்கு சென்றது தெரிந்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாதவராவ் வீட்டிற்குள் ஸ்ரீநாத் செல்லும் காட்சிகள் இருந்தன. ஆனால் அவர் வீட்டில் இருந்து, வெளியே வரும் காட்சிகள் இல்லை.

மூன்று பைகளில்

கடந்த 28ம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்து, மூன்று பைகளை எடுத்துக் கொண்டு, மாதராவ் வெளியே வரும் காட்சிகளும், அவர் பைக்கில் சென்ற காட்சிகளும் இருந்தன. அவரது மொபைல் நம்பருக்கு, போலீசார் அழைத்தபோது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.கடந்த 5ம் தேதி இரவு, ஆந்திராவில் வைத்து மாதவராவை, சம்பிகேஹள்ளி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஸ்ரீநாத்தை கொன்றதை ஒப்புக்கொண்டார்.ஸ்ரீநாத் வேலை செய்த சிட் பண்ட் நிறுவனத்தில், மாதவராவ் ஐந்து லட்சம் ரூபாய், பணம் கட்டி இருந்தார். அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி சென்றார். அவருக்கும், ஸ்ரீநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக மாறினர். மாதவராவ் வீட்டிற்கு, ஸ்ரீநாத் அடிக்கடி சென்று உள்ளார். மாதவராவ் மனைவிக்கும், ஸ்ரீநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் மொபைல் போனிலும் பேசி உள்ளனர்.இதற்கிடையில், மாதவராவ் கட்டிய, ஐந்து லட்சம் ரூபாயை திரும்ப தராமல், ஸ்ரீநாத் ஏமாற்றி உள்ளார். இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.'எனது மனைவியுடன் கள்ளக்காதல் வைத்து உள்ளாயா?' என கேட்டு, ஸ்ரீநாத்திடம், மாதவராவ் பிரச்னையும் செய்துள்ளார். கடந்த 28ம் தேதி காலையில் ஸ்ரீநாத்தை, மாதவராவ் தனது வீட்டிற்கு வரவழைத்தார்.

உடல் சிக்கவில்லை

அங்கு வைத்து ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் தலையில் இரும்புக் கம்பியால் அடித்து, மாதவராவ் கொன்று உள்ளார். பின்னர் அரிவாளை எடுத்து ஸ்ரீநாத் உடலை, மாதவராவ் துண்டு, துண்டாக வெட்டி உள்ளார். இரவு வரை வீட்டிற்குள் இருந்த மாதவராவ், நள்ளிரவில் மூன்று சாக்குப்பைகளில் ஸ்ரீநாத் உடல் பாகங்களை போட்டு, பைக்கில் எடுத்துச் சென்று, கால்வாயில் வீசிவிட்டு, ஆந்திரா தப்பியதும் தெரிந்தது.மாதவராவ் கொடுத்த தகவலின்பேரில், கால்வாயில் வீசப்பட்ட ஸ்ரீநாத் உடல்களை தேடும் பணி நடக்கிறது. மூன்று நாட்கள் ஆகியும் உடல் சிக்கவில்லை. கொலை, ராமமூர்த்திநகரில் நடந்து இருப்பதால், சம்பிகேஹள்ளி போலீசார் வழக்கை, ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை