உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரமிக்க வைக்கும் கெம்மனஹுண்டி மலை

பிரமிக்க வைக்கும் கெம்மனஹுண்டி மலை

சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரேயில் கடல் மட்டத்தில் இருந்து 1,434 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது 'கெம்மனஹுண்டி' என்ற அழகிய மலை வாசஸ்தலம்.இங்கு நீரோடைகள், பசுமையான தாவரங்களுக்கு மத்தியில் உள்ள பள்ளத்தாக்குகள் மூச்சை அடைக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. காபி, தேயிலை தோட்டங்களாலும், அடர்ந்த மூங்கில் தோப்புகளாலும் அடர்ந்த காடுகளாக உருவாகி உள்ளது. கெம்மன்ஹுண்டி என்ற பெயர், மூன்று கன்னட வார்த்தைகளில் இருந்து உருவாகி உள்ளது. கெம்பு (சிவப்பு), மண்ணு (மண்), ஹுண்டி (குழி) என்பது சிவப்பு மண்ணை கொண்ட இடம் என்பதாகும்.மைசூரு மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் நினைவாக, 'கே.ஆர். ஹில்ஸ்' என்ற பெயரிலும் கெம்மன்ஹுண்டி அழைக்கப்படுகிறது.இதன் அழகை கண்டு ரசித்த மன்னர், தனது கோடை வாசஸ்தலமாக மாற்றினார். பின், இங்குள்ள ரிசார்ட்டை, கர்நாடக அரசுக்கு நன்கொடையாக வழங்கினார்.கர்நாடகாவின் தோட்டக்கலை துறை, இந்த ரிசார்ட்டையும், சுற்றுப்புறங்களையும் மேம்படுத்தி, பராமரித்து வருகிறது. அத்துடன் ஏராளமான அலங்கார செடிகளை வளர்த்து வருகிறது.

புலிகள் காப்பகம்

இதுமட்டுமின்றி, ராஜ்பவன் (தோட்டக்கலை துறை விருந்தினர் மாளிகை), இசட் பாயின்ட், ராக் கார்டன், ஹெப்பே நீர்வீழ்ச்சி, கல்ஹத்தகிரி நீர்வீழ்ச்சி, பாபா புடன் மலை, பத்ரா புலிகள் காப்பகம் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.மலையில் அமைந்துள்ள ராஜ்பவனில் இருந்து மாலையில் சூரிய அஸ்தமன காட்சியை காண பலரும் வருகை தருவர். கெம்மன்ஹுண்டி, ஆண்டு முழுதும் இதமான காலநிலையை வழங்குகிறது. செப்டம்பர் முதல் மே வரையிலான கால கட்டத்தில் செல்வது சிறந்தது. மழை காலங்களில் செல்வதை தவிர்க்கலாம். இங்குள்ள முக்கிய பகுதிகளை பார்க்க இரண்டு நாட்களாகும்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்பவர்கள் ஷிவமொகாவுக்கு செல்லலாம். அங்கிருந்து 74 கி.மீ., தொலைவு பஸ், டாக்சியில் பயணித்து கெம்மனஹுண்டி செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் ஷிவமொகா, பிரூரில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள், சிக்கமகளூருக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்லலாம். அங்கு தங்குவதற்கு, ராஜ்பவன் உட்பட பல ரிசார்ட்கள் உள்ளன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை