ர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் உள்ளன. அன்றைய அரசர்களின் வீரம், திறமை, சிறந்த ஆட்சிக்கு சாட்சியாக நிற்கின்றன. இவற்றில் சவுந்தட்டி கோட்டையும் ஒன்றாகும்.பெலகாவியில் இக்கோட்டை அமைந்துள்ளது. கர்நாடகாவின் வரலாறு மற்றும் கட்டடக் கலைக்கு முன்னோடியாக போற்றப்படுகிறது. இது, 'சவந்தவாடி கோட்டை' என்றும் அழைக்கப்படுகிறது.சவுந்தட்டி கோட்டை, 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ரட்டா வம்சத்தினரால் கட்டப்பட்டதாக வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இது யாதவர்களின் ஆட்சிக்கு வந்தது. அதன்பின் பாமினி சுல்தான் வசம் இருந்து, இறுதியாக மராத்தியர்கள் வசமானது. சவுந்தட்டி கோட்டை, பல போர் களங்கள், ஆட்சி மாற்றங்களையும் கண்டுள்ளது.கோட்டையின் கட்டடக் கலை, இன்றைய கட்டட பொறியாளர்களுக்கு சவால் விடும் வகையில் கட்டப்பட்டது. கம்பீரமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் சிறப்பான கட்டட கலையை கண்டு, ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.பிரமாண்ட கற்சுவர்கள் சூழப்பட்டு, எதிரிகளின் தாக்குதல்களை எதிர் கொள்ளும் வகையில், வலுவாக கட்டப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றிலும் எதிரிகளை கண்காணிக்க, கண்காணிப்பு கோபுரங்கள், ஆழமான அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன.கோட்டையில் பல வாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கலை நயத்துடன் தென்படுகின்றன. கோட்டைக்குள் மன்னரின் குடும்பத்தினர் மற்றும் தர்பார் நடத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன. கல் துாண்களையும் கொண்டுள்ளது. இவைகள் அன்றைய கால கட்டட கலையின் சிறப்பை உணர்த்துகின்றன.சவுந்தட்டி கோட்டை, சிறப்பான வரலாறு மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் கொண்டது. கோட்டையை சுற்றி வந்தால், நம்மை அந்த காலத்துக்கு அழைத்து செல்லும். மலை மீது கட்டப்பட்டுள்ளதால், இங்கிருந்து சுற்றி பார்க்கும் போது, மனதுக்குள் புதிய உற்சாகம், புத்துணர்ச்சி ஏற்படுவதை உணரலாம். கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகளை காணலாம்.சுற்றுலா பயணியருக்கு, கோட்டையின் வரலாறு, இதன் முக்கியத்துவத்தை விவரிக்கும் தகவல் பலகைகள் உள்ளன. கைடுகளும் உள்ளனர். இவர்கள் கோட்டை வரலாறு, இதை ஆண்ட மன்னர்கள், சிறப்பு குறித்து தகவல் கூறுவர். அனைத்து நாட்களும் கோட்டை கதவு திறந்திருக்கும். காலை முதல் மாலை வரை, சுற்றுலா பயணியருக்கு அனுமதி உள்ளது.பெலகாவி, சவதத்தி நகரில் கோட்டை அமைந்துள்ளது. இங்கு வர பஸ் வசதி, ரயில், தனியார் வாகன வசதியும் உள்ளது. அருகிலேயே ரயில் நிலையம் உள்ளது. விமான நிலையமும் பக்கம்தான். பெலகாவிக்கு வருவோர், கர்நாடகாவின் பொக்கிஷமான சவுந்தட்டி கோட்டையை காண மறக்காதீர்கள். மறந்தால் அற்புதமான அனுபவத்தை இழப்பீர்கள்- நமது நிருபர் -.