உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்முவில் 2 இடங்களில் தாக்குதல் பயங்கரவாதி இருவர் சுட்டுக்கொலை

ஜம்முவில் 2 இடங்களில் தாக்குதல் பயங்கரவாதி இருவர் சுட்டுக்கொலை

தோடா, ஜம்மு - காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நேற்று தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இருவர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையில், துணை ராணுவப்படை வீரர் ஒருவரும் பலியானார். ஜம்மு - காஷ்மீரின் ரெய்சியில் கடந்த 9ம் தேதி, சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நிலை தடுமாறிய பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், ஒன்பது பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்முவில் இரு வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள சுகாய் கிராமத்தில் நேற்று அதிகாலை புகுந்த பயங்கரவாதிகள், அங்குள்ள வீடுகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பல வீடுகள் சேதமடைந்தன. ஆனால், உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.அதேபோல், தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தற்காலிக முகாம் மீது இரண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கு இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.இதில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர் கபீர்தாஸ் என்பவர் பலியானார். அது மட்டுமின்றி பாதுகாப்பு படையினர் தரப்பில் ஆறு பேர் காயமடைந்தனர். இறுதியில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு சிலர் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதால் தோடா, கதுவா, ரெய்சி மாவட்டங்களில் வீடு வீடாக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சுற்றுலா பஸ் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ