மேலும் 3 கோடி வீடுகள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த முதல் அமைச்சரவை குழு கூட்டத்தில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கூடுதலாக, மூன்று கோடி வீடுகள் கட்டித்தர ஒப்புதல் அளிக்கப்பட்டது.கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தகுதி உடைய குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு கட்டித்தரும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தருவதோடு, கழிப்பறை வசதிகள், சமையல் எரிவாயு, மின்சார இணைப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் 4.21 கோடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டு களில் கூடுதலாக, இரண்டு கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.இந்நிலையில், மூன்றாவது முறை பிரதமர் மோடி பதவி ஏற்ற மறுதினமான நேற்று, முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் கூடுதலாக மூன்று கோடி வீடுகள் கட்டித்தர ஒப்புதல் அளிக்கப்பட்டது.