புதுடில்லி, பார்லி.,யின் இரு சபைகளிலும் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. லோக்சபாவில் பட்ஜெட் குறித்து, சமீபத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், 'மகாபாரதத்தில் சக்கர வியூகத்தை அமைத்து, அபிமன்யுவை கொன்றது போல், மத்திய பா.ஜ., அரசு பட்ஜெட்டை அறிவித்து, நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்துகிறது. நம் நாடு, ஆறு பேர் கையில் சிக்கித் தவித்து வருகிறது' என, குற்றஞ்சாட்டினார்.இதற்கு, மத்திய அமைச்சர்களும், பா.ஜ., - எம்.பி.,க்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ராகுல் நேற்று வெளியிட்ட பதிவு:பார்லி.,யில் சக்கர வியூகம் குறித்து நான் பேசியது, இரண்டில் ஒருவருக்கு பிடிக்கவில்லை. என் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக, அதில் இருப்பவர்களே தகவல் தெரிவிக்கின்றனர். அமலாக்கத் துறையை வரவேற்க, டீ, பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையே, சி.பி.ஐ., - அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற விசாரணை அமைப்புகளை, பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டி, லோக்சபாவில் நேற்று, காங்கிரசைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்.பி., மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.