உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீர் லாரி மாபியாக்கள் அராஜகம் டில்லி அரசுக்கு கோர்ட் கேள்வி

தண்ணீர் லாரி மாபியாக்கள் அராஜகம் டில்லி அரசுக்கு கோர்ட் கேள்வி

புதுடில்லி, டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது என்று அரசு கூறும் நிலையில், தண்ணீர் லாரி மாபியாக்களின் அராஜகங்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ளதுடன், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், யமுனை நதி பங்கீட்டின்படி, தன்னிடம் உள்ள கூடுதல் தண்ணீரை வினியோகிக்க ஹிமாச்சல் அரசுக்கு உத்தரவிடக் கோரியும், அதை தடுத்து நிறுத்தாமல் முழுமையாக விடுவிக்கும்படி ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரியும், டில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதன்படி, தண்ணீரை திறந்துவிட ஹிமாச்சல் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா, பிரசன்னா வராலே அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை கால அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:தங்களிடம் உபரியாக இருந்த தண்ணீரை திறந்து விட்டுள்ளதாகவும், இதற்கு மேல் தருவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஹிமாச்சல் அரசு கூறியுள்ளது. ஹிமாச்சல் அரசு அனுப்பிய தண்ணீர் எங்கே சென்றது? தண்ணீர் இழப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது.டில்லியில் தண்ணீர் இல்லை என்று கூறும் அரசு, தண்ணீர் இழப்பை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அதுபோல, தண்ணீர் லாரி மாபியாக்கள் அராஜகம் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?அரசுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை; ஆனால், டேங்கர் லாரிகளுக்கு மட்டும் எப்படி தண்ணீர் கிடைக்கிறது. உங்களால் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், டில்லி போலீஸ் தலையிட உத்தரவிட நேரிடும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து, இந்த பிரச்னையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வு, விசாரணையை இன்றும் தொடர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூன் 13, 2024 01:03

முதல்வர் ஜெயிலில் இன்புற்று இருப்பதால் வேறு ஒருவர் முதல்வராக முடியவில்லை. கோர்ட்டின் கோமாளித்தனத்தால் ஆட்சி நடக்கவில்லை...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை