உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடிய ஆட்டம் என்ன... பேசிய வார்த்தை என்ன?

ஆடிய ஆட்டம் என்ன... பேசிய வார்த்தை என்ன?

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு, மே மாதம் தேர்தல் நடந்தது. 135 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. சித்தராமையா முதல்வராக உள்ளார். துணை முதல்வராக சிவகுமார் பதவி வகிக்கிறார்.காங்கிரஸ் அரசு ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்து, நான்கு வாக்குறுதிகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும் என முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், அமைச்சர்களும் அதீத நம்பிக்கையில் இருந்தனர்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'லோக்சபா தேர்தலில் எங்கள் தொகுதியில் இருந்து, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கூடுதலாக ஓட்டுகள் வாங்கித் தருவோம்' என்று, அடிக்கடி கூறி வந்தனர்.ஆனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெறும் ஒன்பது இடங்களில் மட்டும், வெற்றி பெற்றது. பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களை விட, பா.ஜ., -- ம.ஜ.த., வேட்பாளர்கள் கூடுதல் ஓட்டுகள் வாங்கினர்.இதில் பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, மாகடி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தான் அதிகம் பேசினார்.'பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் ஒரு டாக்டர். ஆப்பரேஷன் தியேட்டரை தவிர அவருக்கு என்ன தெரியும். கழுத்தில் 'டை' கட்டிக்கொண்டு வேலை செய்தவருக்கு, அரசியலைப் பற்றி என்ன தெரியும்' என கிண்டல் அடித்தார். மாகடி தொகுதியில் இருந்து, காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷுக்கு ஒரு லட்சம் கூடுதல் ஓட்டுகள் பெற்று தருவதாக கூறினார். ஆனால், மாகடி தொகுதியில் சுரேஷை விட, மஞ்சுநாத் 33,000 கூடுதல் ஓட்டுகள் பெற்றார்.ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைனும் தனது தொகுதியில் அதிக ஓட்டுகள் வாங்கி தருவதாக, சவால் விடும் வகையில் பேசி வந்தார். ஆனால் வெறும் 145 ஓட்டுகள் தான் முன்னிலை பெற்று தர முடிந்தது.மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவிகுமாரும் சவால் விடும் வகையில் பேசுவதில் வல்லவர். ஆனால் இவரது தொகுதியான மாண்டியாவில் காங்கிரஸ் வேட்பாளரை விட, ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்ட, குமாரசாமி கூடுதல் ஓட்டுகள் பெற்றார்.ஒட்டுமொத்த லோக்சபா தேர்தல் முடிவுகளும், வாய் சவடால், சவால் விட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வாயை அடைத்துள்ளது. இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகின்றனர்.அவர்களைப் பார்த்து பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணியினர், 'ஆடிய ஆட்டம் என்ன... பேசிய வார்த்தை என்ன... இனி தைரியம் இருந்தால் பேசிப் பாருங்கள்' என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Apposthalan samlin
ஜூன் 25, 2024 13:26

வாய்ச்சவடால் பேச கூடாது ஒரு நாள் வரலாறு திரும்பும் ஜெகன் மோகன் ஆட்டம் முடிவுக்கு வந்தது பிஜேபி 400 என்று வாய்ச்சவடால் என்ன ஆனது? கருணாநிதியே அம்மையார் கைது செய்து இழுத்துட்டு போனார் பின்னர் அம்மையார் சிறையில் பத்தி உருட்டினார் அதனால் செடிக்குள் விழுந்த பணம் பழம் போல் இருக்கனும் .


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ