ராகுல் மன்னிப்பு கேட்பாரா நீட் விவகாரத்தில் பா.ஜ., கேள்வி
புதுடில்லி, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், இந்திய தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை என குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், 'ராகுல் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்பாரா' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் கடந்த 22ல் பேசுகையில், 'நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய தேர்வு முறையே முற்றிலும் மோசடியானது. பணம் வைத்துள்ள நபர் நினைத்தால், எந்த தேர்வையும் விலைக்கு வாங்கிவிடலாம்' என குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில், வினாத்தாள் கசிந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. அப்போது, 'நாடு முழுதும் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை' என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியாதாவது:நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் கூச்சலிட்டு கொண்டிருக்கிறார். அவர், இந்திய தேர்வு முறையை உலக அளவில் அவதுாறு செய்துள்ளார். அவரது பேச்சு, பார்லிமென்ட் கண்ணியத்தையும், எதிர்க்கட்சித் தலைவருக்கான கண்ணியத்தையும் மீறியுள்ளது. நீட் தேர்வு தன் புனித தன்மையை இழக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ராகுல் தன் கருத்துக்காக மன்னிப்பு கேட்பாரா. நீட் வழக்கு விசாரணை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய 155 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.