உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னபட்டணாவில் யோகேஸ்வர்? ம.ஜ.த., தொண்டர்கள் நிபந்தனை!

சென்னபட்டணாவில் யோகேஸ்வர்? ம.ஜ.த., தொண்டர்கள் நிபந்தனை!

பெங்களூரு: சென்னபட்டணா இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளராக ம.ஜ.த., சார்பில் போட்டியிட்டால், யோகேஸ்வருக்கு ஆதரவு அளிப்பதாக, சென்னபட்டணா தொகுதி ம.ஜ.த.,வினர் நிபந்தனை விதித்துள்ளனர்.லோக்சபா தேர்தலின் போது பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தது. பெங்களூரு ரூரலில் தேவகவுடாவின் மருமகனும், ஜெயதேவா இதய மருத்துவமனை முன்னாள் இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத்தும்; மாண்டியாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் போட்டியிட்டனர்.

தொகுதி காலி

பெங்களூரு ரூரலில் பா.ஜ.,வின் மஞ்சுநாத் வெற்றி பெற, முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் கடுமையாக உழைத்தார். மஞ்சுநாத் 1.50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குமாரசாமி எம்.பி.,யானதால், காலியான சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தொகுதியை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காக, தன் மகன் நிகிலை போட்டியிட வைக்க குமாரசாமி நினைத்தார். ஆனால், நிகிலோ, தனக்கு போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். அதே வேளையில், நிகில் போட்டியிட்டால், ஆதரவு அளிக்க தயார் என்று பா.ஜ.,வின் யோகேஸ்வர் கூறினார்.கடந்த சில நாட்களுக்கு முன் புதுடில்லியில், மத்திய அமைச்சர் குமாரசாமியை, யோகேஸ்வர் சந்தித்து பேசினார். அப்போது, சென்னபட்டணாவில் யோகேஸ்வர் நின்றால், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக குமாரசாமி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

கைமாறு

யோகேஸ்வருக்கு கைமாறு செய்யும் வகையில், சென்னபட்டணா தொகுதி ம.ஜ.த.,வினர் தயாராக உள்ளனர். அதேவேளையில் தொகுதியை ம.ஜ.த.,வே தக்க வைத்து கொள்ள வேண்டும். எனவே, யோகேஸ்வர் ம.ஜ.த.,வில் இணைந்து போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு அளிக்க தயார் என உள்ளூர் தலைவர்கள் கூறுகின்றனர்.ஆனால், ம.ஜ.த.,வில் இணைந்து போட்டியிட யோகேஸ்வருக்கு விருப்பம் இல்லை. பா.ஜ.,வில் இருந்து மட்டுமே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.பெங்களூரு ரூரலில் துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் சுரேஷை தோற்கடித்ததில், யோகேஸ்வரின் பங்கு அதிகம். இதனால் இரு கட்சி தலைவர்களுக்கும் அவருக்கு ஆதரவாக உள்ளனர். இருப்பினும், விரைவில் நடக்கும் இரு கட்சிகளின் உயர்மட்டக்குழு என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ