| ADDED : பிப் 22, 2024 07:19 AM
பெங்களூரு: பெங்களூரில் புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, பொதுமக்களுக்கு மாநகராட்சி 15 நாட்கள் அவகாசம் வழங்கி உள்ளது.முதல்வர் சித்தராமையா கடந்த 16ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெங்களூரு மாநகராட்சி மூலம் வரி வருவாயாக 2024 - 2025ம் ஆண்டில், மாநில அரசு 6,000 கோடி ரூபாய் எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார். இதன்பின்னர் வரி வசூலை அதிகரிக்க, சொத்து ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கும் நடைமுறையை, மாநகராட்சி துவங்கி உள்ளது.இதையடுத்து புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறையை அமல்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது.இந்த திட்டத்தை அமல்படுத்தினால், புறநகரில் உள்ள கட்டடங்கள், சொத்துகளை விட, நகருக்குள் சொத்துகள் மீதான வரி அதிகமாகும்.இந்நிலையில், புதிய சொத்து வரி மதிப்பீட்டு முறை தொடர்பான வரைவு அறிக்கையை, மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க பொதுமக்களுக்கு 15 நாட்கள், கால அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.