புதுடில்லி:நம் நாட்டின் குற்றவியல் நடைமுறையில் பரவலான மாற்றத்தை கொண்டு வரும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இத்துடன் முடிவுக்கு வருகின்றன. புதிய சட்டங்களின்படி, சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்தால் மரண தண்டனை கிடைக்கும். போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாமலேயே, ஆன்லைனில் புகார் அளிக்கவும் இந்த சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களையே, இத்தனை ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்தோம். இவற்றில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என, பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் இருந்து வந்தன.பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்ற பின், குற்றவியல் சட்டங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல்வேறு துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், ஆங்கிலேய காலத்து சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன.'பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம்' என பெயரிடப்பட்டுள்ள அந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெற்றன.இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.மூன்று சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்:
* கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், விசாரணை துவங்கி, 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும்* பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை, அவரது பாதுகாவலர் அல்லது உறவினர் முன்னிலையில், பெண் போலீஸ் அதிகாரி பதிவு செய்ய வேண்டும். மேலும், மருத்துவ அறிக்கைகள் ஏழு நாட்களுக்குள் வர வேண்டும்* ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாத செயல்கள் போன்றவை, ராஜ துரோகத்துக்கு பதிலாக தேச துரோகமாக வரையறுக்கப்பட்டு உள்ளன. இவை போன்ற குற்றங்களில் தேடுதல் வேட்டைகள், பறிமுதல்களை, 'வீடியோ' பதிவு செய்வது கட்டாயமாகும்* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தையை வாங்குவது மற்றும் விற்பது கொடூரமான குற்றமாகும். 18 வயது நிரம்பாத சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்தால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் * பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு, புதிய சட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.* இந்திய தண்டனை சட்டத்தில் முன்பிருந்த 511 பிரிவுகள், 358 ஆக குறைக்கப்பட்டுள்ளன* திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளிப்பது, சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்வது, கும்பலாக தாக்குவது, நகை பறிப்பு போன்ற குற்றங்களை கையாள, இந்திய தண்டனை சட்டத்தில் விதிகள் இல்லை. பாரதிய நியாய சன்ஹிதாவில் இதற்கான விதிகள் இடம் பெற்றுள்ளன * ஒரு குற்ற சம்பவம் குறித்து புகார் அளிக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக இனி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு தகவல் தொடர்பு வசதி வாயிலாக புகாரை அளிக்கலாம். புகாரை எளிதாக, விரைவாக அளிக்கவும், போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுப்பதையும் இது எளிதாக்குகிறது* பூஜ்ய எப்.ஐ.ஆர்., என்ற நடைமுறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் வாயிலாக, எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் ஒருவர் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். இது, எங்கள் காவல் வரம்புக்குள் வராது என்று போலீசார் இனி கூற முடியாது* கைது நடவடிக்கையின் போது, கைதுக்கு ஆளாகும் நபர், தான் விரும்பும் ஒரு நபருக்கு அதை பற்றிய தகவலை அளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடி ஆதரவையும், உதவியையும் இது உறுதி செய்யும்* தவிர, கைது செய்யப்பட்ட விபரங்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மாவட்ட தலைமையகத்தில், பொது பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் முக்கிய தகவல்களை பெற இது வழி செய்யும்* வழக்குகள் மற்றும் விசாரணைகளை வலுப்படுத்த, தடயவியல் நிபுணர்கள், கொடூர குற்றங்கள் நடந்த இடங்களுக்கு சென்று சாட்சியங்களை சேகரிப்பது கட்டாயமாகும் * பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள், 90 நாட்களுக்குள் தங்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது* வழக்கு நடைமுறைகளை விரைவுபடுத்தவும், காகித பயன்பாட்டை குறைத்து, வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தகவல் பரிமாற்றத்தை திறம்படச் செய்வதற்காக, சம்மன்களை இனி மின்னணு தகவல் தொடர்பு முறை வாயிலாக அளிக்க, புதிய சட்டம் இடமளிக்கிறது* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முடிந்தவரை, பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் ஆண் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளிக்கலாம். ஆனால், அங்கு ஒரு பெண் இருப்பது கட்டாயம்* எப்.ஐ.ஆர்., போலீஸ் ரிப்போர்ட், குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆவணங்கள், 14 நாட்களுக்குள் இரு தரப்புக்கும் அளிக்கப்பட வேண்டும்* நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்* பாலினம் பற்றி குறிப்பிடுகையில், மூன்றாம் பாலினத்தவர்களும் இனி சேர்த்துக் கொள்ளப்படுவர்.இவை போன்ற முக்கிய அம்சங்கள் புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
ஏற்கத்தக்க அம்சங்கள்
இல்லை!
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி
கூறியதாவது:ஆங்கிலேயர் இயற்றிய சட்டங்களை நீக்கியுள்ளதாக மத்திய அரசு
கூறுகிறது. ஆனால், 511 பிரிவுகளில் உள்ளவற்றில், 95 சதவீதத்தை அப்படியே
பயன்படுத்தியுள்ளனர். 24 பிரிவுகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. ஜூலை 1க்கு
முன் நடந்த குற்றங்களுக்கு பழைய சட்டம் பொருந்தும். ஜூலை 1க்கு பின் புதிய
சட்டம் பொருந்தும். அப்படியானால், நடைமுறையில் இரு வேறு சட்டங்களை பின்பற்ற
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்
வரையிலான தண்டனைக்கு கைது அவசியமில்லை எனவும், ஒரு வேளை கைது தேவையென்றால்,
டி.எஸ்.பி., அனுமதி கொடுக்கலாம் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. ஒவ்வொரு
புகாருக்கும், டி.எஸ்.பி.,யின் பதிலுக்கு காத்திருக்கத் துவங்கினால்,
இன்ஸ்பெக்டருக்கு என்ன வேலை? இதனால், சட்டம் - ஒழுங்கு சிக்கல் தான்
ஏற்படும். 'கை விலங்கு போடக்கூடாது' என பல வழக்குகளில் தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 'கை விலங்கு போடலாம்' என்று புதிய சட்டம்
கூறுகிறது. தொடர் குற்றங்களை செய்கிறவர்களையும், சாதாரண குற்றங்களை
செய்பவர்களையும் ஒன்று போலவே புதிய சட்டம் கையாள வழிவகை செய்திருக்கிறது.
தொழில்நுட்ப சாட்சிகளை புதிய சட்டத்தில் கொண்டு வந்துள்ளது நல்ல விஷயம்.
புதிய சட்டங்களில் பல விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை.இவ்வாறு அவர்
கூறினார்.
பழைய, புதிய
சட்டங்களுக்கு இடையேயான வேறுபாடு என்ன?
ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களில் இருந்து, மூன்று புதிய சட்டங்கள்
எவ்வாறு வேறுபடுகின்றன என்பது குறித்து, அரசு மூத்த வழக்கறிஞர்
மு.ராமமூர்த்தி கூறியதாவது: இந்திய தண்டனை சட்டத்தில், பாலியல்
வழக்குகளில் ஆண்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டது. இப்போது, அனைத்து
பாலினங்களுக்கும் பொருந்தும்படி சட்ட விதிகளை மாற்றியுள்ளனர். அடுத்து,
ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ராஜ துரோக வழக்கானது, இந்திய தண்டனை
சட்டம் 121ன் கீழ் பதியப்பட்டு வந்தது. சுதந்திரத்துக்கு பின் உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் பலர், 'இந்த சட்டத்தை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?
இந்த நாட்டில் மன்னராட்சி இல்லை. பின், எப்படி ராஜ துரோகம் வரும்' என்று
கேள்வி எழுப்பினர். தற்போது அதை நீக்கிவிட்டு, அரசுக்கு எதிரான ஆயுதம்
தாங்கிய புரட்சிக் குழு என்று மாற்றியுள்ளனர். உபா எனப்படும் சட்ட விரோத
நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்துக்கும் இது பொருந்தும். அடுத்து, தமிழகத்தில்
'குண்டர் சட்டம்' என அழைக்கப்படுவதை போல, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு
மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இதை, நாடு முழுதும்
பொதுமைப்படுத்தி விட்டனர்.முன்னெச்சரிக்கை கைதுகளை பொறுத்தவரை, கலெக்டர்,
எஸ்.பி., அந்தஸ்தில் உள்ளவர்கள் ஒப்புதல் கொடுத்தால் தான் செல்லுபடியாகும்.
இவை, நாடு முழுதும் வெவ்வேறு பெயர்களில் இருந்ததை ஒரே சட்டமாக கொண்டு
வந்து விட்டனர். அடுத்து, குற்றவியல் நடைமுறை சட்டத்துக்குப் பதிலாக,
'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா' என கொண்டு வந்துள்ளனர். நம் நாட்டில்,
மூன்று ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள்
அதிக அளவில் உள்ளன. அவற்றை செய்யும் நபர், முன்கூட்டியே தன் குற்றத்தை
ஒப்புக் கொள்ளும் வசதி உள்ளது. அவ்வாறு குற்றத்தை ஒப்புக் கொண்டால், சமூக
சேவைகள் செய்ய வேண்டும். சமூக சேவை அல்லது சிறைத் தண்டனை என்ற முடிவை
சம்பந்தப்பட்ட நீதிபதியே இறுதி செய்வார். அடுத்து, 'எப்.ஐ.ஆர்., போட்டவுடன்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 180 நாட்களுக்குள் விசாரணையை துவங்கி
விட வேண்டும்' என, சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல்
தண்டனை பெறும் கொடூர குற்றங்களுக்கு, 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்ய வேண்டும். பழைய சட்டத்தில் எப்.ஐ.ஆர்., போட்டு நான்கு
ஆண்டுகளுக்குப் பின்னும்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வழக்கம்
இருந்தது. மேலும், 180 நாட்களுக்குள் குற்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு
வராவிட்டால், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற
வழக்குகளில் டிஜிட்டல் ஆவணங்களையும் சட்டப்பூர்வமாக்கி உள்ளனர். அதேபோல,
'சிசிடிவி' காட்சிகளையும் ஒரு ஆவணமாக எடுத்துக் கொள்ளலாம். அடுத்து, மூன்று
சட்டங்களிலும் தரவுகள் திருட்டு, காப்புரிமை திருடுவது உள்ளிட்டவை
குற்றமாகவே கருதப்படும். இதனால், தனி நபர்களின் விபரங்களை பாதுகாக்கும்
நிலை உருவாகி உள்ளது. தவிர, குற்ற வழக்குகளில் சாட்சிகளை நேரில் ஆஜர்படுத்த
வேண்டும் என்ற நடைமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், புதிய சட்டத்தில்,
ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு சாட்சியை அழைத்து செல்ல
வேண்டியதில்லை. குறிப்பிட்ட நபர் இருக்கும் இடத்தில் இருந்தே, 'வீடியோ
கான்பரன்ஸ்' வாயிலாக சாட்சியமளிக்கலாம். இந்திய சாட்சிகள் சட்டத்துக்குப்
பதிலாக, 'பாரதிய சாட்சிய அதினியம்' இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து
டிஜிட்டல் ஆதாரங்களும் குற்றவாளிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும். இவை,
ஒயிட் காலர் குற்றங்களை தடுக்க பெரிதும் உதவும். ஒருவர் குற்றம் செய்யும்
போது, இந்தியாவில் இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிய
முடியும். ஆனால், புதிய சட்டத்தின் வாயிலாக, அவர் எந்த நாட்டில் இருந்து
மோசடி செயல்களில் ஈடுபட்டாலும், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க
முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக
அரசு எதிர்ப்பு!
புதிய சட்டங்களுக்கு தமிழகத்தில் இருந்து
எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
'மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கு முன், அதுகுறித்து
மாநில அரசுகளின் கருத்துகளை பெற வேண்டும். அதுவரை புதிய சட்டங்களை
நிறுத்திவைக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.தமிழக வழக்கறிஞர்களில்
குறிப்பிட்ட சாரார், புதிய சட்டங்களை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பில்
ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், 'சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில்
சட்டங்களுக்கு பெயர் வைப்பது ஏற்புடையது அல்ல. சட்டங்களும், மசோதாக்களும்
ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என, அரசியல் சட்டப் பிரிவு 348
கூறுகிறது. அதற்கு மாறாக மத்திய அரசு செயல்படுகிறது' என்றனர்.புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியர்களால், இந்தியர்களுக்காக, இந்திய பார்லிமென்டால் உருவாக்கப்பட்டவை. ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டத்தில், தண்டனைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த புதிய சட்டங்கள், நீதிக்கு முன்னுரிமை அளிக்கும். - அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,