UPDATED : டிச 08, 2025 03:06 PM | ADDED : டிச 08, 2025 02:34 PM
உடுப்பி: தர்மமும், இந்திய அரசியலமைப்பும் ஒரே நோக்கத்தை தான் வெளிப்படுத்துகின்றன என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; தர்மமும், அரசியலமைப்பும் இரு வெவ்வேறு உலகம் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அப்படியல்ல. தர்மம் ஒழுக்கநெறிகளுடன் வாழ வேண்டும் என்கிறது. அதேபோல, அரசியலமைப்பு சட்டநெறிகளுடன் வாழ வழி வகுக்கிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதேபோல, இரண்டின் நோக்கமும் அமைதி மற்றும் கண்ணியமான சமுதாயமாகும். அசல் அரசியலமைப்பு புத்தகத்தில் அரசின் வழிகாட்டுக் கொள்கைகள் எனும் பகுதியில் கடவுள் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு பகவத் கீதையை வழங்குவது போன்ற அழகிய ஓவியம் இருக்கும். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், சிறந்த நோக்கத்துடன் தான் இந்த ஓவியத்தை அங்கு வைத்தார்கள். ஏனெனில், இது நாட்டின் நீதி, நலன், பொறுப்பு, சமத்துவம் மற்றும் நேர்மையான ஆட்சி போன்ற வழிகாட்டு கொள்கைகளை பிரதிபலிக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.