உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா அடுத்த முதல்வர் சதானந்த கவுடா?

பாதயாத்திரையாக சென்று எடியூரப்பா ராஜினாமா அடுத்த முதல்வர் சதானந்த கவுடா?

பெங்களூரு:கர்நாடக முதல்வராக 38 மாதம் பதவி வகித்த எடியூரப்பா, கட்சி மேலிடத்தின் கட்டளைக்கிணங்க, ராஜினாமா கடிதத்தை, ராஜ்பவனில் கவர்னர் பரத்வாஜிடம் வழங்கினார்.சுரங்க மோசடி குறித்த லோக் ஆயுக்தா அறிக்கையால், முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்யும்படி, பா.ஜ., மேலிடம் வற்புறுத்தியது. ஆனால், எடியூரப்பா தயங்கினார். ராஜினாமா செய்ய பல நிபந்தனைகளை விதித்தார். இதனால், கடந்த நான்கு நாட்களாக கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.டில்லியில் இருந்து வந்த பா.ஜ., மேலிட தலைவர்கள், முதல்வர் எடியூரப்பாவின் நிபந்தனைகளில் ஒன்றை மேலிடம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தனர். ஏற்கனவே, 31ம் தேதி மதியம் ராஜினாமா செய்வதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். நேற்று காலையில், தன் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு அனுப்பினார்.இதையடுத்து, பகல் 3.30 மணியளவில் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று கூறப்பட்டது. அதன் பின், 2.30 மணிக்கு கவர்னர் அனுமதி கொடுத்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையில், மதியம் 12 மணியளவில் முதல்வர் எடியூரப்பாவுக்கு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பலிஜா சமூகத்தினர் பாராட்டு விழா நடத்தினர்.பகல் 2.30 மணியளவில் முதல்வரின் இல்லத்திலும், கர்நாடக ராஜ்பவன் முன்பும் போலீஸ் குவிக்கப்பட்டது. ஆனால், 2.30 மணியளவில் தன் வீட்டிலிருந்து எடியூரப்பா வெளியே வரவில்லை. நேரம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால், பெரும் பரபரப்பு நிலவியது. ஓட்டலில் தங்கியிருந்த மேலிட தலைவர்கள் டென்ஷன் அடைந்தனர்.அடுத்த முதல்வர் சதானந்த கவுடா என்று அறிவித்த பின்னர்தான், ராஜினாமா கடிதம் கொடுப்பேன் என்று முதல்வர் எடியூரப்பா கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்த நேரத்தில், முதல்வரின் ஆதரவாளர்களான அமைச்சர் பசவராஜ் பொம்மை, பிரபாகர் கோரே ஆகியோர், மேலிட தலைவர்களை சந்தித்து பேசினர்.மாலை 3.40 மணியளவில், முதல்வர் எடியூரப்பா தன் வீட்டிலிருந்து ராஜ்பவனுக்கு அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய தலைவர்களுடன் பாதயாத்திரையாக சென்றார். வழி நெடுகிலும் தொண்டர்கள், முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல்வருக்கு பின்னால் அணிவகுத்து வந்தனர். இந்த ஊர்வலத்தில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் பெரும் சிரமப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.பாதயாத்திரையாக சென்ற எடியூரப்பா, 4 மணியளவில் ராஜ்பவனை அடைந்தார். அந்த நேரத்தில், பெங்களூரில் பல பகுதிகளில் கனமழை பெய்தது.ராஜ்பவனில், கவர்னர் பரத்வாஜை சந்தித்து, 'எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்ற ஒரு வரியிலான ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது, புதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை, பதவியில் தொடருமாறு கவர்னர் கேட்டுக்கொண்டார்.ராஜ்பவனிலிருந்து வெளியே வந்த எடியூரப்பா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின் போது, தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை குறித்து விவரித்தார். முதல்வர் பதவியை பிடிப்பதற்கு தான் பட்ட கஷ்டத்தையும், மக்களுக்காக செய்த சேவையையும் ஒன்றுவிடாமல் தெரிவித்தார். கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சதானந்த கவுடாவை சிபாரிசு செய்துள்ளேன், என்றார்.கர்நாடக இயற்கை வளங்களுக்கு பாதுகாவலனாக இருந்த என்னை, சுரங்க ஊழலில் குற்றவாளி ஆக்கி விட்டார்களே, என்று வருத்தத்துடன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை